Published : 19 Mar 2025 06:03 PM
Last Updated : 19 Mar 2025 06:03 PM
கோவை: பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் நாளை (மார்ச் 20) பேரூர் ஆதின வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோவையில் இன்று (மார்ச் 19) செய்தியாளர்களிடம் கூறியது: “பேரூர் ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பேரூர் ஆதினம், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, நொய்யல் ஆறு அறக்கட்டளை ஆகியோர் சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டம் நாளை (20-ம் தேதி) பேரூர் ஆதின வளாகத்தில் முதல் மரக்கன்று நடவு செய்து தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக, கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரம் கிராமங்களில் அரச மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன. நாளை நடக்கவுள்ள தொடக்க விழாவில் பேரூர் ஆதினத்தின் 25-வது குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, சிறுதுளி அறக்கட்டளை அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்” என்று அவர் கூறினார்.
இச்சந்திப்பின் போது, காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், நொய்யல் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆறுச்சாமி, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment