Published : 15 Mar 2025 03:49 PM
Last Updated : 15 Mar 2025 03:49 PM

திருவாரூர் ஆழித் தேரோட்டம் - தியாகராஜர் கோயிலில் கொடியேற்றம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. இந்த பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பதுடன், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும்.

இந்தகைய சிறப்புமிக்க கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ கொடியுடன் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர்,சந்திரசேகரர், தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 4 வீதிகளிலும் உலா வந்து தியாகராஜர் கோயிலை வந்தடைந்து, 54 அடி உயரம் உள்ள கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

அங்கு சிறப்பு யாகபூஜையுடன், 54 அடி உயரமுள்ள கொடி மரத்துக்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து உற்சவ கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மங்கள இசையுடன் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் நந்தி உருவம் பொறித்த, 30 மீட்டர் நீளமுடைய உற்சவ கொடி ,கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆழி தேரோட்ட விழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. அது நாள் வரை ஒவ்வொரு நாளும் தியாகராஜ சுவாமி கோயிலில் உற்சவங்கள் நடைபெறும். சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x