Last Updated : 26 Jul, 2018 11:21 AM

 

Published : 26 Jul 2018 11:21 AM
Last Updated : 26 Jul 2018 11:21 AM

ஒன்றில் இரண்டு 08:முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர்

குலசேகரப் பாண்டியனுக்கு முத்தாரம்மன் காட்சியளித் ததால் குலசேகரன்பட்டினம் என்று அழைக்கப்படும் இந்த ஊர் புராதனத் துறைமுகமாகவும் வரலாற்றில் பெயர் பெற்றது. திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினத்தை சுருக்கமாக குலசை என்று உள்ளூர்காரர்கள் அழைக்கின்றனர்.

குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் அம்மையும், அப்பனும் அருகருகே இருக்கிறார்கள்.  பிற ஆலயங்களில் சிவபெருமானுக்குத் தனிச் சன்னிதி, அம்மனுக்குத் தனிச் சன்னிதி என்று இருக்கும்.  ஆனால் இங்கு முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் ஒரே சன்னிதியில் அருகருகே காட்சி தருகிறார்கள்.  லிங்க வடிவில் இல்லாமல் உருவ வடிவில் காட்சி தருகிறார் சிவபெருமான் ஆகிய ஞானமூர்த்தீஸ்வரர்.

அம்மை நோயை, உடலில் முத்துப் போட்டதாகக் கூறுவது வழக்கம்.  முத்துக்களை  ஆற்றிக் குணப்படுத்துவதால் முத்தாற்றம்மன் என்று அழைக்கப்பட்டு பிறகு முத்தாரம்மன் ஆனதாகக் கூறுகிறார்கள்.  இப்போதும்கூட அம்மை நோய் கண்டு முத்தாரம்மனுக்கு வேண்டிக் கொண்டு அந்த நோயிலிருந்து விடுபட்டவர்கள் பலரும் இங்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுப் போகிறார்கள்.

ஆமணக்கு விதையை முத்தாரம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.  அம்மை பருமனான வடிவில் இருந்தால் பூசணிக்காயைக் காணிக்கையாக்கு கிறார்கள். பொடிப் பொடியான நோய் என்றால் அரிசியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்,  குறிப்பாக, பெண்கள் செவ்வாய்க் கிழமைகளில் அம்மனுக்குச் செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் அந்த தோஷம் கழியும் என்ற நம்பிக்கை உள்ளது.

பரிவர்த்தனை யோகநிலை

இங்கு சுவாமியின் ஆற்றலை அம்மன் உள்வாங்கி சிவமயமாக இருக்கிறார்.  அம்மன் ஆற்றலை சிவபெருமான் உள்வாங்கி சக்தி மயமாக இருக்கிறார்.  இதைப் பரிவர்த்தனை யோகநிலை என்கிறார்கள்.  அம்மனுக்கும் சுவாமிக்கும் சேர்த்தேதான் அர்ச்சனை நடத்தப்படுகிறது.

நான்கு திருக்கரங்கள் கொண்டவராகக் காட்சியளிக்கிறார் முத்தாரம்மன்.  உடுக்கை, சூலம், நாகபாசம், திருநீற்றுக் கொப்பரை ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு கரத்தில் காட்சியளிக்கின்றன.  அமர்ந்த நிலையில் இருக்கிறார்.  கண்மலரும், புல்லாக்கு மூக்குத்தியும் அம்மனுக்கு அதிக சோபையை அளிக்கின்றன.

அருகிலுள்ள ஞானமூர்த்தீஸ்வரர் இருகரங்கள் கொண்டவராக அருள் பாலிக்கிறார்.  இவரது ஒரு கையில் செங்கோல் காட்சியளிக்கிறது.  (சிலர் இதைக் கதை என்றும் கூறுகிறார்கள்).  மறுகையில் திருநீற்றுக் கொப்பரை.

இருவருக்குமே அமர்ந்த கோலம்தான்.  வலக்காலை மடக்கி வைத்து இடக்காலைத் தொங்கவிட்டபடி காட்சிதருகிறார் அம்மன். இடக்காலை மடக்கி வைத்து வலக்காலைத் தொங்கவிட்டபடி காட்சிதருகிறார் ஈசன்.  ஆலய மண்டபத்தில் பேச்சியம்மன் வலப்புறமும் கருப்பசாமி இடப்புறமும் காட்சியளிக்கின்றனர்.  பைரவர் தெற்கு முகமாக கருவறையை எதிர்நோக்கி நிற்கிறார்.

பஞ்சகாளிகளின் நிலம்

திருச்செந்தூர் பகுதியில் பஞ்சகாளிகளுக்கு ஆலயங்கள் உள்ளன.  அந்தப்    பஞ்சகாளிகளின் பெயர்கள் வீரகாளி, கருங்காளி, முப்பிடாதி, அங்காள அம்மன்.  ஐந்தாவதான ஈஸ்வரி அம்மன் என்பவர்தான் தற்போது முத்தாரம்மனாக வழிபடப்படுகிறார்.        பொதுவாகவே அம்மன் ஆலயங்களில் தசரா சிறப்பாகக் கொண்டாடப்படும்.  முத்தாரம்மன் ஆலயத்தில் இது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  

ஜண்டை மேளம், நையாண்டி மேளம், தாரை, தப்பட்டை, பேண்டு வாத்தியங்களின் உற்சாக உரத்த ஒலி இந்தப் பகுதியை நிறைக்கிறது.  இதையும் மீறி ’ஓம் அம்மா முத்தாரம்மா, ஓம் சக்தி முத்தாரம்மா’ என்ற பக்தி முழக்கங்கள் கேட்கின்றன. தங்கள் துயரங்களைப் போக்கவல்ல சக்தி அன்னை முத்தாரம்மன் என்பதை உறுதியாக நம்புகிறார்கள் இங்கு வருபவர்கள்.

நவராத்திரி தொடர்பாக விரதம் இருப்பவர்கள் காவி வேட்டி அணிந்து துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து விரதம் தொடங்க வேண்டும். பத்து நாட்களிலிருந்து 48 நாட்கள் வரை அவரவர் விருப்பம் மற்றும் சூழலுக்கேற்ப விரதம் இருக்கிறார்கள்.

தசரா அன்று காப்பு கட்டிக் கொள்வது மரபு.  காப்பு கட்டும் முன்பு கடலில் நீராடிவிட்டு முத்தாரம்மனை வணங்கி காப்பு கட்டிக்கொண்டு அவரவர் விரும்பிய வேடத்தை அணியலாம்.  காளி வேடம் அணிபவர்கள் சூலாயுதத்தைக் கையில் கொண்டு, சூரசம்ஹாரம் நடைபெறும்போது அம்மனின் தேர் அருகே நிற்க வேண்டும்.  சூரனை அம்மன் வதம் செய்தவுடன் தங்கள் சூலாயுதத்தைக் கடல் நீரில் கழுவ வேண்டும்.

மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மையின் திருவுருவம் சுமந்துவரப் படுகிறது.  அவருடன் கம்பீரமாக பக்தர்கள் சூழ்ந்து வருகிறார்கள்.  சும்மா அல்ல, போர் வீரர்கள்போல உடை தரித்தவர்கள் மற்றும் காளியைப் போன்று வேடம் தரித்தவர்கள்.

தசரா நாளில் அம்பாளால் அசுரனின் எருமைத்தலை கொய்யப்படும்.  அடுத்து அவனது சிம்மத்தலை கொய்யப்படும்.  வாண வேடிக்கைகள் களை கட்டும்.

இங்குள்ள ஈசனும் உமையும் சுயம்புவாகத் தோன்றியவர்கள்.  இந்த சுயம்புகளையே மக்கள் நீண்டநாள் வழிபட்டு வந்தார்கள். என்றாலும் திருமேனிகளாக அவர்களைத் தரிசித்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் அந்தக் கோவிலின் அர்ச்சகருக்கு ஒரு கனவு உண்டானது.  அதில் காட்சியளித்த அன்னை, குமரி மாவட்டத்திலுள்ள மயிலாடிக்குச் சென்று சுப்பையா ஆச்சாரியிடம் திருமேனிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு கொடுத்தாள். சிற்பி சுப்பையாவின் கனவிலும் அம்மை காட்சியளித்தார். 

பாறைகளில் ஆண் பாறை, பெண் பாறை என்று இரண்டு வகைகள் உண்டு.  சில கற்களில் மட்டும் ஆண் பாறை, பெண் பாறை ஆகிய இரண்டுமே இணைந்து காணப்படும்.  அப்படிப்பட்ட ஒரு கல்லைத்தான் அம்மன் தேர்ந்தெடுக்கச் செய்தார். சிற்பி, சிலைகளைச் செய்ய அவை இந்தக் கோயிலில் 1934-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்பிருந்த சுயம்பு உருவங்கள் இப்போதும் கருவறையின் அடியில் உறைந்திருந்து அருள் அளிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x