Published : 27 Feb 2025 06:36 AM
Last Updated : 27 Feb 2025 06:36 AM
ஈஷா வளாகத்தில் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். ஈஷா யோகா மைய வளாகத்துக்கு வந்த அவரை, ஈஷா நிறுவனர் சத்குரு வரவேற்று, ஈஷா மையத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சூர்ய குண்டம், நாக சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்த நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார். தொடர்ந்து, லிங்க பைரவி கோயிலில் வழிபட்ட அமித்ஷாவுக்கு, சத்குரு ருத்ராட்ச மாலையை அணிவித்தார். பின்னர், தியானலிங்கத்தில் சத்குரு தலைமையில் நடந்த பஞ்சபூத க்ரியையில் பங்கேற்ற அமித்ஷா, அங்கிருந்து ஆதியோகி சிலை அமைந்துள்ள இடத்துக்கு வந்து, யோகேஸ்வர லிங்கத்துக்கு கைலாச தீர்த்தத்தை ஊற்றி, வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, மகா சிவராத்திரி விழாவுக்கான யாக வேள்வியை தொடங்கிவைத்தார்.
விழாவில், சத்குரு தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்புரையாற்றினார். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஆளுநர்கள் ஹரிபாபு கம்பஹம்பதி (ஒடிசா), குலாப் சந்த் கட்டாரியா (பஞ்சாப்), மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சஞ்சய் ரதோட், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, நள்ளிரவு தியானத்தில் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை பக்தர்களுக்கு தீட்சையாக வழங்கிய சத்குரு ‘மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்’ என்ற இலவச செயலியை அறிமுகப்படுத்தினார். விழாவில் பங்கேற்ற அமித்ஷா, ஈஷா வளாகத்தில் உள்ள விடுதியில் நேற்று இரவு தங்கினார். இன்று (பிப்.27) அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பீளமேடு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
மேடையில் எஸ்.பி.வேலுமணியுடன்... இந்த விழாவில் அமித்ஷாவுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்து கொண்டார். ஈஷா யோகா மைய சத்குருவுடன், எஸ்.பி.வேலுமணி நல்ல நட்புடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் டெல்லி வரை நட்பு வளையத்தில் இருப்பவரும், பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்ற மனநிலையில் இருந்து வருபவருமான எஸ்.பி.வேலுமணி இவ்விழாவில் அமித்ஷாவுடன் ஒரே மேடையில் பங்கேற்றது பல்வேறு அரசியல் யூகங்களை எழுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment