Published : 26 Feb 2025 11:59 PM
Last Updated : 26 Feb 2025 11:59 PM
கோவை: “மனிதர்களின் உடல் மற்றும் மனம் இந்த கிரகத்தில் மிகவும் சிக்கலானவையாக கருதப்படுகிறது. அவற்றை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்றால் நல்வாழ்வு என்பது சாத்தியமில்லை” என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
கோவை - ஈஷா வளாகத்தில் புதன்கிழமை இரவு நடந்த மகாசிவராத்திரி தொடக்க விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியது: “அனைவருக்கும் வணக்கம். சுதந்திரத்திற்கு பின் மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சராக ஒருவர் செயல்பட்டார். இந்தியாவை ஒருங்கிணைத்த உன்னத பணி மேற்கொண்டார். அவர்தான் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது முயற்சிக்கு பின் நாட்டில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. அன்று அவர் மேற்கொண்ட பணியை போன்றே இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார்.
மாதந்தோறும் குண்டுவெடிப்பு நாட்டில் நடந்து கொண்டிருந்த நிலையில் அடுத்து எங்கு ஹைதராபாத், மும்பை, புனேவா என்ற அவல நிலை காணப்பட்ட சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாதுகாப்பு படை பிரிவினர் சிறப்பாக பணி மேற்கொள்ளும் காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. அவர்களின் உன்னத பணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
தற்போது நாட்டில் சில இடங்களில் காணப்படும் தீவிரவாத செயல்களும் 2026-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார். காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் மறு ஒருங்கிணைப்பு செய்து இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சிறு தவறு செய்தால் கூட அதை திருத்துவது மிகவும் கடினமாகும். இன்று மத்திய அரசு அதை சீர்படுத்தியுள்ளது. தற்போது காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர்.
ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் இறையாண்மை சரியாக இல்லாவிட்டால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட எந்த துறையில் சிறந்து விளங்கினாலும் பயனில்லை.
மகா சிவராத்திரி என்பது மதம், இனம், மொழி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்த இரவு மனிர்களுக்கானது. மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் ஒரு இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருந்தால் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார். அதற்கு நான் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அனுமதி இல்லை. இந்துக்களுக்கு சுத்தமாக அனுமதி இல்லை. மனிதர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என பதிலளித்தேன்.
ஆதியோகி என்பது இதை எடுத்து காட்டுவதற்காகவே நிறுவப்பட்டுள்ளது. நலமாக வாழ வெளியில் தேடுவதை தவிர்த்து நமக்குள்ளே தேட வேண்டும். யோகா என்ற அறிவியலை ஆதியோகி உருவாகியுள்ளதே அனைத்திற்கும் அடிப்படையாகும். கடந்த காலத்தை நினைவுகூறுவதற்கு அல்ல. எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த ஆதியோகி சிலை உதவும்.
இன்றைய தலைமுறையில் மிக எண்ணிக்கையில் மனிதர்கள் தங்களை குறித்து தெரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆதியோகி சிலை நிறுவப்படும். பெங்களூருவில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது.
மனிதர்களின் உடல் மற்றும் மனம் இந்த கிரகத்தில் மிகவும் சிக்கலானவையாக கருதப்படுகிறது. அவற்றை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்றால் நல்வாழ்வு என்பது சாத்தியமில்லை. மனிதர்களாக பிறந்து தண்டுவடம் நேராக இருப்பவர்கள் அனைவருக்கும் மகாசிவராத்திரி, ஆதியோகி, யோக அறிவியல் ஆகியவை உங்களுக்க சம்பந்தப்பட்டவையாகும்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் எவ்வாறு மனிதர்கள் இரவு முழுவதும் கண் விழித்து அமர்ந்திருப்பார்கள் என கேட்டார். அந்த இரவு தான் மது உள்ளிட்ட எவ்வித போதை வஸ்துக்களும் இல்லாமல் சிவபோதையில் ஐக்கியமாகிவிடுவார்கள் என பதிலளித்தேன். அனைவரும் மகாசிவராத்திரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்” என்று அவர் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment