Published : 21 Aug 2014 12:00 AM
Last Updated : 21 Aug 2014 12:00 AM
போஜராஜன் எனும் அரசர் கி.பி. பதினோராம் நூற்றண்டில் உஜ்ஜயினி எனும் நாட்டை ஆண்டு வந்தார். அவர் அரசவையில் சிறந்த அமைச்சர்களும் அறிஞர்களும் கவிஞர்களும் இடம் பெற்றிருந்தனர்.
பெருங் கவியான, மேகதூதம் எழுதிய காளிதாசர் இந்த அவையில்தான் இருந்தார். அவருடன் தனஞ்சயன் எனும் பெரும் கவிஞரும் இருந்தார். அரசரும் சிறந்த அறிவாளி. ஒருமுறை அரசர் தனஞ்சயனின் அறிவாற்றலைக் கண்டு மிகவும் பாராட்டினார். பாராட்டப்பட்ட தனஞ்சயன், எல்லாப் புகழும் குரு ஸ்ரீமானதுங்க ஆசார்யருக்கே என்றார். அது கேட்ட அரசர் அவ்வளவு சிறந்த ஆசார்யரை சந்திக்க விரும்பி, அவரை அழைத்து வர ஆட்களை அனுப்பினார்.
ஆசார்யரோ தாம் ஒரு முற்றும் துறந்த முனிவரென்றும் அரசரால் ஆவது ஒன்றுமில்லை எனக் கூறி வர மறுத்து விட்டார். அது கேட்ட அரசர் தன் கட்டளையை மீறிய ஸ்ரீமானதுங்கரைப் பலவந்தமாகப் பிடித்து வர ஆணையிட்டார். காவலர்களும் அவ்வாறே செய்தனர்.
போஜராஜன் தன் அறிவுக் கூர்மையைக் காட்ட, அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார். ஸ்ரீமானதுங்கரோ அன்று மவுன விரதமிருந்ததால் பதிலேதும் கூறவில்லை. அதனால் கோபமுற்ற போஜராஜன் ஆசார்யருக்கு நாற்பதெட்டு விலங்குகள் பூட்டிச் சங்கிலியால் பிணைத்து சிறையில் அடைத்து அவரின் திறனையும் ஜைன அறத்தின் வலிமையையும் காட்டுக என ஆணையிட்டார்.
ஸ்ரீமானதுங்கஆசார்யர் அன்று சிறையில் உண்ணா நோன்பேற்று ஆதிபகவனான விருஷப தேவரை வணங்கிப் போற்றி அவர் மீது “பக்தாமர ப்ரணத மௌலி” எனத் தொடங்கும் பக்தாமரப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.
முதல் பாடலுக்கே ஒரு விலங்கு தானாக உடைந்து சிதறியது. அவ்வாறு ஸ்ரீமானதுங்கர் பாடப்பாட ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விலங்காக நாற்பத்தெட்டு விலங்குகளும் உடைந்து சிதறி விழுந்தன. சிறைக் கதவுகளும் தானாகத் திறந்தன. இதைக் கண்ட அரசர் வியந்து, ஆசார்யரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அப்பாடல்களே பக்தாமர பாடல்கள் அல்லது பக்தாமர தோத்திரம் எனப்படும். முதல் பாடலின் முதல் வார்த்தையே நூலின் பெயராயிற்று. நாட்டுமக்களும் ஸ்ரீமானதுங்க ஆசார்யரைப் போற்றி வணங்கி பக்தாமரத்தைப் படித்து புண்ணியம் பெற்றனர்.
மகாகவி காளிதாசர் தனது மேகதூதம் எனும் நூலில் பக்தாமரப் பாடல்களிலுள்ள நான்காவது வரிகளை எடுத்து தன் பாடல்களின் நான்காவது அடியாக அமைத்துள்ளார். இதனால் பக்தாமரப் பாடல்களின் சிறப்பு மேலும் தெரியவருகிறது. பக்தாமரம் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இன்றளவும் ஜைனர்கள் ஸ்ரீ மானதுங்க ஆசார்யரின் பக்தாமரப் பாடல்களைப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT