Published : 26 Jul 2018 11:09 AM
Last Updated : 26 Jul 2018 11:09 AM
மால்கம் எக்ஸை அமெரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவராகத்தான் பலரும் அறிவார்கள். ஆனால், ஒரு தனிநபராக அவருக்குள் ஏற்பட்ட ஆன்மிக மாற்றத்தைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். உலகப் புகழ்பெற்ற ‘வேர்கள்’ நாவலை எழுதியவரும் பத்திரிகையாளருமான அலெக்ஸ் ஹேலியின் அறிவுறுத்தலால்தான், மால்கம் எக்ஸ் தன் வாழ்க்கைக் கதையை எழுத ஒப்புக்கொண்டார். The Autobiography of Malcolm X என்ற இந்தத் தன்வரலாற்று நூலை அவருடன் இணைந்து அலெக்ஸ் ஹேலி எழுதியிருக்கிறார்.
இந்த நூலை எழுத ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய மால்கம் எக்ஸ், எழுதத் தொடங்கியதும் தன் குழந்தைப் பருவத்து ஏழ்மை, பதின்பருவத்தில் செய்த குற்றங்கள், ஆன்மிக விழிப்பு, தேசிய தலைவரிலிருந்து உலகத் தலைவராக உருவெடுத்ததுவரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தத் தன்வரலாற்று புத்தகத்தை எழுதிமுடிப்பதில் ஒருவித அவசரத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறார். அவர் காட்டிய அந்த அவசரத்தால், 1965-ம் ஆண்டு, அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் அவரது தன்வரலாறு எழுதிமுடிக்கப்பட்டிருந்தது.
இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க வாழ்க்கையின் கீழ்மைகளை இந்தப் புத்தகம் பதிவுசெய்திருந்தது. அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சில கொந்தளிப்பான நிகழ்வுகளின் பதிவுகள், இந்தப் புத்தகத்தை ஓர் அறிவார்ந்த, ஆன்மிக ஞானத்தை நோக்கிய பயணமாக மாற்றியிருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியது தன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்புமுனையை உருவாக்கியது என்பதை மால்கம் எக்ஸ் அழுத்தமாக இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.
குழந்தைப் பருவம்
மால்கம் எக்ஸின் இயற்பெயர் மால்கம் லிட்டில். 1925-ம் ஆண்டு, அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்திலுள்ள ஒமாஹா நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தை எர்ல் லிட்டில் ‘திருமுழுக்குத் திருப்பணியாள’ராகவும் ‘யுனிவெர்சல் நீக்ரோ மேம்பாட்டுச் சங்க’த்தை உருவாக்கிய மார்கஸ் கார்வேயின் ஆதரவாளராகவும் இருந்தார். 1931-ம் ஆண்டு, மால்கம் எக்ஸின் குடும்பம் மிச்சிகன் மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தது. அப்போது ‘பிளாக் லெகியான்’ என்ற வெள்ளையின மேலாதிக்கவாதக் குழுவினரால் மால்கம் எக்ஸின் தந்தை எர்ல் லிட்டில் கொல்லப்பட்டார்.
அவரது மரணத்துக்குப் பிறகு, குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் அந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏமாற்றிவிடுகிறது. மால்கம் எக்ஸின் தாயார் லூயிஸ் லிட்டில் மனநிலை பாதிக்கப்பட்டதைக் காரணம்காட்டி மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அந்தக் குடும்பத்தின் குழந்தைகளையும் மாகாண அரசு பிரித்துவிடுகிறது.
“ஒரு மாகாண சமூக அமைப்பால் ஒரு குடும்பத்தை அழிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், அது எங்கள் குடும்பத்தை அழித்தது. நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்க விரும்பினோம். அதற்காக நிறைய முயற்சிகள் மேற்கொண்டோம். எங்கள் குடும்பத்தை அழித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சமூக நல அமைப்புகள், நீதிமன்றங்கள், அதன் மருத்துவர்கள் எங்கள் முகங்களில் ‘ஒன்று-இரண்டு-மூன்று’ குத்துவிட்டார்கள்” என்று தன் குழந்தைப் பருவத்தை விவரிக்கிறார் மால்கம் எக்ஸ்.
வழக்கறிஞர் கனவு
பதின்மூன்று வயதில் தன் மோசமான நடிவடிக்கையின் காரணமாக மிச்சிகனில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்படுகிறார் மால்கம் எக்ஸ். ஆனால், அவர் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த வெள்ளைக் குடும்பம், அவரை வேறொரு நல்ல பள்ளிக்கு அனுப்புகிறது. அந்தப் பள்ளியில் சேர்ந்த பிறகு, படிப்பில் சிறந்து விளங்கத் தொடங்குகிறார். அவர் தான் வழக்கறிஞராக விரும்புவதாகத் தன் ஆசிரியரிடம் தெரிவிக்கிறார். அந்தக் காலத்தில், அமெரிக்காவின் கறுப்பின இளைஞர்கள் உணவுவிடுதியிலோ செருப்புக்கடையிலோ பணியாற்றுவதுதான் வழக்கம்.
“வழக்கறிஞர் கனவு என்பது ஒரு ‘நீக்ரோ’ காணும் யதார்த்தமான கனவு அல்ல. உன்னால் ஆகக்கூடிய லட்சியத்தைத்தான் நீ வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அந்த ஆசிரியர் பதின்மூன்று வயதுச் சிறுவனிடம் சொல்கிறார். தனது அறிவையும் உணர்வுகளையும் தன்னை வளர்க்கும் குடும்பமும் ஆசிரியர்களும் அங்கீகரிக்கவில்லை என்று புரிந்தவுடன், அங்கிருந்து பாஸ்டனிலிருக்கும் தன் சதோதரி எல்லாவிடம் சென்றுவிடுகிறார். அப்போது இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருக்கிறது.
தன் பதினேழு வயதில், பாஸ்டனிலிருந்து நியூயார்க் செல்கிறார் மால்கம். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவருக்கு அமெரிக்காவின் குற்ற உலகம் அறிமுகமாகிறது. திருட்டு, சட்டவிரோதமாக மதுபானம் விற்பது போன்ற பணிகளை அவர் செய்யத் தொடங்குகிறார். அந்தப் பணிகளின் காரணமாக 1946-ம் ஆண்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அப்போது அவருக்கு இருபது வயது.
சிறை வாழ்க்கை
அவர் சிறையிலிருக்கும்போது, மால்கமின் சகோதரர் பில்பர்ட், தன் மற்ற சகோதரர்களுடன் ‘இஸ்லாம் தேசம்’ என்ற அமைப்பில் இணைகிறார். அந்த அமைப்பை சிகாகோவைச் சேர்ந்த எலிஜா முகம்மது என்பவர் நடத்திவருகிறார். அவர் கறுப்பின மக்களிடம் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். அவர் சிறையிலிருக்கும்போது நாத்திகராக இருந்தார். ‘சாத்தான்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
ஆனால், தன் குடும்பத்தினரின் முயற்சியால் புகைபிடித்தல், போதைப் பழக்கம் போன்றவற்றிலிருந்து நீங்கி இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார் அவர். இஸ்லாமின் பாதையில் கடவுளிடம் தன்னை ஒப்படைக்கும் முறையைக் கற்றுக்கொள்கிறார். சிறையிலிருக்கும் நூலகத்தைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு பதினைந்து மணிநேரம் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறார்.
மதம், தத்துவங்கள், வரலாறு போன்ற தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிக்கிறார். வரலாறு என்பது வெள்ளை இன மக்களின் பார்வையிலேயே இதுவரை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார். காந்தியின் சுதந்திரப் போராட்ட முறையால் அவர் ஈர்க்கப்பட்டார். அவர் வாசிப்பு உலகம் விசாலமானதைப் பற்றி, “நான் எப்போதும் இவ்வளவு சுதந்திரமாக உணர்ந்ததில்லை” என்று சொல்கிறார் அவர். ஒரு குற்றவாளியாகச் சிறையில் அடைக்கப்பட்டவர், ஆன்மிக, அரசியல் அறிவுபெற்ற ரவுத்திரத்தையும் தக்கவைத்துக் கொண்ட இளைஞனாக 1952-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
மெக்காவுக்குப் புனித யாத்திரை
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், ஆப்பிரிக்க அடிமைகளாக இருப்பவர்கள், தங்கள் பெயர்களின் பின்னால் வெள்ளை எஜமானர்களின் பெயர்களைச் சேர்க்கும்முறையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தன் பெயருக்குப் பின்னால் ‘எக்ஸ்’ என்பதை இணைத்துகொண்டார். ‘இஸ்லாம் தேசம்’ அமைப்புடன் இணைந்து ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்குகிறார்.
ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் தேசியத் தலைவராக உருவாகிறார். அப்போது மெக்கா செல்ல முடிவெடுத்தார். இந்த மெக்கா புனிதப் பயணத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இரண்டு அத்தியாயங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இஸ்லாம் மார்க்கத்தில் அவர் உணர்ந்த சகோதரத்துவத்தையும் பிறிதில்லாப் பெருநிலையையும் உளப்பூர்வமாக விளக்குகிறார்.
“இந்த பூமியில் வாழ்ந்த 39ஆண்டுகளில், மெக்கா புனித நகரத்தில்தான் முதன்முதலாக இந்தப் பிரபஞ்சம் முழுமையையும் படைத்தவரின் முன் நிற்பதாக உணர்ந்தேன். நான் ஒரு முழுமையான மனிதனானேன்” என்று சொல்கிறார். இந்த மெக்கா புனிதப் பயணம் அவரிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
இஸ்லாம் மார்க்கம் அவருக்குக் கற்றுத்தந்த சகோதரத்துவத்தின் வழியை அவர் பின்பற்றினார். வெள்ளையினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். இந்த மார்க்கத்தின் வழியாக அவர் மதங்களைக் கடந்து மனித குலத்தின் ஒருமைநிலையைப் புரிந்துகொண்டார்.
மால்கம் எக்ஸின் அரசியலில் இந்த ஆன்மிக விழிப்பு அமைந்திருக்காவிட்டால் அது முழுமையடைந்திருக்காது. அவரது மரணத்துக்குப் பிறகு, கறுப்பின மக்களுக்கு உத்வேகம் தரும் ஆற்றலாக அவர் உலகம் முழுவதும் நிலைபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT