Published : 30 Jan 2025 01:53 PM
Last Updated : 30 Jan 2025 01:53 PM
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இன்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் காலை 7:30 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எழுந்தருள, தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இந்த விழாவில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தேர் திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment