Last Updated : 12 Jul, 2018 10:22 AM

 

Published : 12 Jul 2018 10:22 AM
Last Updated : 12 Jul 2018 10:22 AM

ஆன்மா என்னும் புத்தகம் 11: புரிதல் என்னும் ஓடு உடைதல்

லீல் ஜிப்ரான் என்ற லெபனிய அமெரிக்க எழுத்தாளரை உலகம் அறியச் செய்த புத்தகம் ‘தீர்க்கதரிசி’(The Prophet). 1923-ம் ஆண்டு வசன கவிதை வடிவத்தில் வெளியான இந்தப் புத்தகம், வாழ்வின் பொதுவான பண்புகளைப் பற்றிய ஆன்மிகப் பார்வையை முன்வைக்கிறது.

அர்ஃபலிஸே தீவில் வாழும் அல்முஸ்தஃபா என்ற மனிதனை இந்தப் புத்தகம் பின்தொடர்கிறது. அந்தத் தீவில் வாழும் மக்கள், அல்முஸ்தஃபாவை ஞானியாகக் கருதுகின்றனர். ஆனால், அவரோ தாயகம் திரும்பிச் செல்லும் கப்பலுக்காகப் பன்னிரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார். ஒரு நாள், தன் கப்பல் மலை உச்சியிலிருந்து துறைமுகத்துக்கு வருவதைக் காண்கிறார். அவர் பன்னிரெண்டு ஆண்டுகளாகப் பழகிய அந்தத் தீவின் மக்களைப் பிரிந்து செல்வதை நினைத்து வருந்துகிறார்.

அந்தத் தீவின் பெரியவர்கள் அவரைத் திரும்பி போக வேண்டாமென்று சொல்கின்றனர். அந்தக் கூட்டத்திலிருக்கும் பெண் துறவி ஒருவர், அல்முஸ்தஃபா புறப்படுவதற்குமுன், அவரது வாழ்க்கைத் தத்துவத்தைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்கிறார். அவர், அந்தக் கூட்டத்திடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்தாம் ‘தீர்க்கதரிசி’.

மனித வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான கொடை, குற்றம், தண்டனை, சட்டங்கள், கற்றல், நேர நிர்வாகம், சமயம், இன்பம், மரணம், அழகு, நட்பு, உறவுகள் பற்றிய கருத்துகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் கலீல் ஜிப்ரான் வரைந்தவை.

காதல், திருமணம் குறித்து

“காதல் உங்களைக் கை காட்டி அழைக்கும்போது, அதைப் பின்தொடருங்கள்; அதன் வழிகள் எவ்வளவு கடினமானதாக, ஆழமானதாக இருப்பினும்” என்கிறார் மெய்ஞ்ஞானி. “காதலில் அமைதியையும் இன்பத்தையும் மட்டும் தேடுபவன் முட்டாள்” என்கிறார் அவர். காதலின் எல்லையை நம்மால் வரையறுக்க முடியாது என்று சொல்லும் அவர், “காதல் உங்களைத் தகுதியானவராகக் கருதினால், அதுவே உங்களை வழிநடத்தும்” என்கிறார்.

திருமணத்தைப் பொறுத்தவரை, இருவர் ஒருவராகும் வழக்கமான கருத்தை மறுக்கிறார் அவர். “ஒரு ஓக் மரமும் சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை. அதே போல், ஒரு உண்மையான திருமணம், இருவரும் தனித்துவத்தை வளர்த்துகொள்வதற்கு இடம்கொடுக்கும். இருவரின் கோப்பையையும் நாம் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், ஒரு கோப்பையிலிருந்து மட்டும் பருகக் கூடாது. சேர்ந்து பாடி ஆடிக் களித்திருங்கள். ஆனால், உங்களில் இருவரையும் தனித்திருக்கவும் விடுங்கள்” என்கிறார். சிறந்த திருமண உறவுக்கான விதியாக இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.

பணி

அன்றாடப் பணிகளையும் சிலர் சங்கடமாகக் கருதுகின்றனர். ஆனால், “உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணியைச் செய்வதால், பூமியின் தொலைதூரக் கனவின் ஒரு பகுதியை நனவாக்குகிறீர்கள். ஏனென்றால், அந்தக் கனவு இந்தப் பூமியில் பிறந்தவுடன், அது உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்கிறார். தாங்கள் செய்யும் பணியை நேசிப்பவர்களுக்கு அதுதான் நிறைவுக்கான ரகசியம் என்பது தெரியும்.

வலியும் துன்பமும்

“உங்களின் புரிதலை மூடிவைத்திருக்கும் முட்டையின் ஓட்டை உடைப்பது போன்றதுதான் உங்கள் வலி” என்கிறார் அவர். விலைமதிப்பற்ற வாழ்க்கையின் புதிய அனுபவம் போல், உங்கள் வலியை அற்புதமாக்க முயலுங்கள். அப்படி உங்களால் செய்ய முடிந்தால், காலங்கள் கடந்துபோவதைப் போல் அமைதியாக, உங்களை ஆட்கொள்ளும் உணர்வுகளையும் கடக்க முடியும்.

சுதந்திரம்

சுதந்திரத்துக்காக ஏங்கிக்கொண்டிருப்பதே அடிமைத்தனம் போன்றதுதான். மனிதர்கள் சுதந்திரமாக இருப்பதைப் பற்றிப் பேசும்போது, அது அவர்கள் தப்பிச்செல்வதற்கான அம்சங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது.

நன்மை, தீமை

தீமை என்ற ஒரு விஷயமே கிடையாது. பசித்து, தாகமெடுக்கும் நிலையில் இருப்பதுதான் தீமை. அது, தன் தேவைகளை இருளில் மட்டுமே தேடித் திருப்தி அடைகிறது. வெளிச்சம் இருக்கிறது. வெளிச்சமின்மையும் இருக்கிறது. தீமையின் மீது வெளிச்சத்தை ஒளிரவிட்டால், அது மறைந்துவிடும்.

12chsrs_khalilவழிபாடு

கடவுளை வழிபடும்போது எதையும் உங்களால் கேட்க முடியாது. ஏனென்றால் உங்களது ஆழமான தேவைகளையும் கடவுள் அறிவார். கடவுளே நமது முக்கியமான தேவையாக இருக்கும்போது, மற்ற பொருட்களை அவரிடம் வேண்டக் கூடாது.

இந்தப் புத்தகத்தை வாழ்க்கையின் ரகசியங்களைத் திறக்கும் விதமாக எழுதியிருக்கிறார் ஜிப்ரான். நாம் இந்த உலகத்துக்கு வருகிறோம், மீண்டும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பிச் சென்றுவிடுகிறோம். இந்தப் புத்தகத்தின் முடிவில், ஞானி அல்முஸ்தஃபா கப்பலில் ஏறுவதற்குத் தயாராகும்போது, அவர் தன் கடற்பயணத்தைப் பற்றிப் பேசவில்லை. அவர் பிறப்பதற்கு முன், எங்கிருந்து வந்தாரோ, அங்கே செல்வதைப் பற்றிப் பேசுகிறார்.

அவர் வாழ்க்கை ஒரு சிறிய கனவுபோல் தோன்றுகிறது. வாழ்க்கையில் கிடைக்கும் எந்த அனுபவத்தையும் நினைத்து நாம் மகிழ்ச்சிஅடைய வேண்டும் என்று இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. உலக மொழிகளில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’, ‘முறிந்த சிறகுகள்’ போன்ற புத்தகங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசக செல்வாக்கைப் பெற்றது.

கலீல் ஜிப்ரான்

இவர் 1883-ம் ஆண்டு வடக்கு ஒட்டோமானில் உள்ள லெபனானில் பிறந்தார். இவர் தந்தையின் சூதாட்டப் பழக்கத்தால், இவருடைய தாய், குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேற நேர்ந்தது. கலீல் ஜிப்ரான், ஓவியத்தில் தனக்கு இருக்கும் திறமையை பள்ளியில் வெளிப்படுத்தினார். உயர்கல்விப் படிப்பை முடித்து, 19 வயதில் பாஸ்டன் திரும்பிய ஜிப்ரான், காசநோயில் தன் குடும்பத்தினரை இழந்தார். அப்போது, மேரி ஹஸ்கெல் என்ற ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை, கலீல் ஜிப்ரான் ஓவியங்கள் வரைவதற்கும் கவிதைகள் எழுதுவதற்கும் ஊக்கமளித்தார்.

பாரிஸில் இரண்டு ஆண்டுகள் கலைப்படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் தங்கி தன் ஓவிய, எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார் அவர். 1920-ம் ஆண்டு, அரேபிய எழுத்தாளர்களுக்கான ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். லெபனானும் சிரியாவும் ஒட்டோமான் பேரரசிடமிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து அரபி மொழியில் அவர் தொடர்ந்து எழுதினார். ‘தி புரோக்கன் விங்க்ஸ்’ (The Broken Wings), ‘தி மேட்மேன்’ (The Madman), ‘தி ஃபோர்ரன்னர்’ (The Forerunner) உள்ளிட்ட படைப்புகளைப் படைத்தார். அவர் 1931-ம் ஆண்டு மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x