Published : 08 Jan 2025 06:30 AM
Last Updated : 08 Jan 2025 06:30 AM
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி |
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, ||
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி |
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, ||
குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி! |
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, ||
என்றேன்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் |
இன்று யாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 24)
கமலக் கண்ணா! மேக வண்ணா! வாமன அவதாரத்தில் திருவிக்கிரமனாக வளர்ந்து உலகம் அளந்தவனே! ராமாவதாரத்தில் தவறிழைத்த ராவணனை இலங்கைப் போரில் வென்றவனே! கண்ணனாக அவதரித்த நாளில் சக்கர வடிவில் வந்து மாயங்கள் செய்த சகடாசுரனை காலால் உதைத்தவனே! விளாங்கனி வடிவாக இருந்த அசுரன் மீது, கன்று வடிவில் வந்த அசுரனை தடியாக வீசியவனே! இந்திரனின் கோபத்தால் தொடர்ந்து பெய்த மழையில் இருந்து மக்களைக் காக்க கோவர்த்தன மலையையே குடையாகத் தாங்கியவனே! உடனே எங்களுக்கு அருள் புரிவாய்!” என்று ஆண்டாளின் தோழிகள், பலவாறு கண்ணனைப் பாராட்டி அவன் அருள் வேண்டி நிற்கின்றனர்.
பக்தியுடன் ஈசனை சரணடைவோம்...!
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ||
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ||
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ||
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ||
(திருப்பள்ளியெழுச்சி 4)
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! அதிகாலைப் பொழுதில் வீணைக் கலைஞர்கள், யாழிசைப்போர், வேத விற்பன்னர்கள், தமிழிசைக் கலைஞர்கள், ஐந்தெழுத்து ஓதியபடி கையில் மலர் மாலைகளுடன் பக்தர்கள், உன்னை நினைத்து மயங்கியவர்கள், நீயே கதி என்று சரண் புகுந்தவர்கள் என்று பலர் உன்னை போற்றுகின்றனர்.
அவர்களின் பக்திக்கு முன்னர் நான் மிக சாதாரணம். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள நீ உடனே எழுந்தருள வேண்டும் என்று ஈசனை வேண்டுகிறார் மாணிக்கவாசகர். கல்வியில் விழிப்புடன் இருப்பவர்கள், உலகில் சிறப்பிடம் பெறுவர். பக்தியில் விழிப்பு நிலையில் உள்ளவர்கள் இறைவனின் திருவடிகளை அடைவர் என்பது இப்பாடலின் உட்கருத்தாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT