Published : 06 Jan 2025 06:17 AM
Last Updated : 06 Jan 2025 06:17 AM
பொன்னேரி: சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்கம் சார்பில் நேற்று சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில், சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்கம் சார்பில் நேற்று 16-ம் ஆண்டாக திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, நேற்று காலை விநாயகர், மூலவரான பாலசுப்பிரமணியர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், ஆதி மூலவர், பைரவர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மாலை மாற்றுதல்: தொடர்ந்து, புதிய மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி - முருகனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு, வள்ளி- முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிக்கு மாலை மாற்றுதல், பக்தர்கள் மீது அட்சதை தூவி ஆசீர்வாதம் வழங்கல், சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துதல் என நடந்த இந்த நிகழ்வில், சிறுவாபுரி, ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரகாரத்தில் உலா: தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க வள்ளி-முருகன் பிரகாரத்தில் உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாணபக்தஜன சங்க சமுதாய மண்டபத்தில், மதியம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT