Published : 05 Jan 2025 03:47 AM
Last Updated : 05 Jan 2025 03:47 AM
மூலவர் : துர்காபுரீஸ்வரர் அம்பாள்: காமுகாம்பாள்
தலவரலாறு: கிடாத்தலை கொண்ட அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான், தேவர்களை காக்கும் பொருட்டு கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்ட அம்பிகை, அசுரனின் தலையைக் கொய்தாள். அது பூலோகத்தில் விழுந்த இடமே கிடாத்தலைமேடு. அசுரனாக இருந்தாலும், ஓர் உயிரைக் கொன்ற பழி தீர, அம்பாள் பூலோகம் வந்து சிவலிங்க பூஜை செய்தாள். அவள் வழிபட்ட லிங்கத்துக்கு துர்காபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.
கோயில் சிறப்பு: தியானத்தில் இருந்த சிவபெருமானை எழுப்பியதால், அவரது கோபத்துக்கு ஆளாகி, மன்மதன் (காமன்) சாம்பலாக்கப்பட்டான். பின்னர் ரதியின் வேண்டுதலுக்கு மனமிறங்கி, அவளது கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும்படி வரம் அளித்தார். கருணை உள்ளத்துடன் அம்பிகை அவனுக்கு கரும்பு வில், மலர்க்கணைகளை திரும்ப அளித்தாள். இதனால் அம்பிகை கரும்புவில் காமுகாம்பாள் என்ற பெயர் பெற்று இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.
சிறப்பு அம்சம்: துர்கை தனிசந்நிதியில் வடக்கு நோக்கிய கிடாத்தலையின் மீது நின்ற நிலையில் அருள்புரிகிறாள். துர்கைக்கு சிலை வடித்த சிற்பி, தேவிக்கு மூக்குத்தி வடிக்கவில்லை சிற்பியின் கனவில் வந்த துர்கை, தன் இடது நாசியில் துளையிடும்படி கட்டளை இட்டாள். அதன்படியே செய்து தேவிக்கு மூக்குத்தி அணிவிக்கப்பட்டது.
பிரார்த்தனை: விவசாயம் சிறக்கவும், கால்நடை வளர்ப்போர் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கும்படியும் அம்பாளை வழிபடுகின்றனர். இங்குள்ள சாமுண்டீஸ்வரி சூலத்துக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து திருமணஞ்சேரி சென்று, அங்கிருந்து வடக்கில் பிரியும் ரோட்டில் 8 கிமீ சென்றால் கிடாத்தலைமேட்டை அடையலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 -10, மாலை5-8 வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT