Published : 05 Jan 2025 03:00 AM
Last Updated : 05 Jan 2025 03:00 AM
‘‘வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். எவ்வித சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது’’ என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர். நாயுடு பேசினார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் திறந்திருக்கும். சுவாமி தரிசனத்திற்கு பின்னர், பக்தர்கள் இதில் அனுமதிக்கப்படுவர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பிரதட்சனம் செய்ய லட்ச கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு படை எடுப்பது வழக்கம். ஆதலால் பக்தர்களுக்கு தேவையான தரிசன ஏற்பாடுகள், போக்குவரத்து, பாதுகாப்பு, தங்கும் இடம், உணவு விநியோகம் போன்றவற்றின் மீது தற்போது திருப்பதி தேவஸ்தானம் மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே ரூ. 300 டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் விநியோகம் செய்து விட்ட நிலையில், தர்ம தரிசன டோக்கன்கள் வரும் 9-ம் தேதி முதல் திருப்பதியில் 8 இடங்களில் 91 மையங்கள் அமைத்து விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு நாள் முன்னதாக, பக்தர்கள் ஆதார் அட்டையுடன் வந்து, வரிசையில் நின்று தரிசன டோக்கன்களை பெற்று, மறுநாள் அதில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சுவாமியை தரிசிக்கலாம். ஆனால், எவ்வித தரிசன டோக்கன்கள்களோ, டிக்கெட்டுகளோ இன்றி திருமலைக்கு சென்று மேற்கண்ட 10 நாட்களில் ஏழுமலையானை தரிசிக்க இயலாது என தேவஸ்தானம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு, வைகுண்ட ஏகாதசிக்கு தர்ம தரிசனத்திற்கான டோக்கன்களை வழங்கவிருக்கும் ஸ்ரீ ராமசந்திரா புஷ்கரணி பகுதியில் நடைபெறும் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 10-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, 19-ம்தேதி வரை பக்தர்கள் அதன் வழியே அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பதியில் 8 இடங்களில் 91 மையங்கள் அமைத்து 9-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வைகுண்ட ஏகாதசிக்கு விஐபி கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. சாமானியர்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு பிஆர். நாயுடு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT