Published : 02 Jan 2025 06:08 AM
Last Updated : 02 Jan 2025 06:08 AM
நாமக்கல்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு வடை மாலை சாத்துபடி செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், நிறைவாக கனகாபிஷேகமும் நடந்தது.
காலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேகக் குழு சார்பில், சுவாமிக்குத் துளசி, முல்லை, மல்லிகை, அரளி, அல்லி, ரோஜா உள்ளிட்ட 3 டன் பூக்களால் சிறப்பு மலர் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT