Last Updated : 26 Jul, 2018 11:05 AM

 

Published : 26 Jul 2018 11:05 AM
Last Updated : 26 Jul 2018 11:05 AM

குரு பூர்ணிமா சிறப்புக் கட்டுரை: பரமாத்மாவை நினைவூட்டுபவர் குரு

குரு பூர்ணிமா: ஜூலை 27

 

குருவருள் இன்றி திருவருள் இல்லை என்பார் ஆன்றோர். குரு பூர்ணிமா தினத்தையொட்டி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தில் `குருவின் பெருமை’ என்னும் தலைப்பில் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் சுவாமிகளின் சிறப்புச் சொற்பொழிவை இதய நிறைவு மையத்தினர் கடந்த வாரம் ஏற்பாடுசெய்திருந்தனர்.

குருவின் துணை கொண்டு நிகழ்த்தப்படும் தியானத்தின் பெருமையையும் அதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் கடவுளின் அருளையும் மோட்ச சாம்ராஜ்யத்தையும் நம்முள் ஏற்படும் மாற்றங்களையும் பல தத்துவங்களோடு விளக்கினார்  கிருஷ்ணன். மிகப் பெரிய உபநிடதத் தத்துவங்களையும் வேதங்களின் உட்பொரு ளையும் மிக எளிமையான உதாரணங்களின் மூலம் விளக்கினார்.

பிரம்மாண்டமான அந்தத் தியான மண்டபத்துக்கு வெளியே வேகமாக வீசிக்கொண்டிருந்தது காற்று, மண்டபத்தின் உள்ளே கிருஷ்ணனின் ஒரு மணி நேரப் பேச்சில் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் அமைதியான நதியினில் ஓடும் ஓடம் போல் திகழ்ந்தனர். அவரது பிரவாகமான பேச்சிலிருந்து சில துளிகளை இங்கே தருகிறோம்.

ஏன் இவ்வளவு கூட்டம்?

கீதாசார்யன்தான் முதல் குரு. கீதை ஒன்றுதான் பகவான் சொன்னது. குருவாகவும் சீடனாகவும் பெருமாள் இருப்பதை இமாச்சலத்தில் காணலாம்.  இங்கே நாராயண பர்வதம் என்றும் நர பர்வதம் என்றும் இருப்பதே இதற்குச் சாட்சி. பரமாத்மா குறித்து மறந்துபோயிருக்கும் ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவை நினைவூட்டுபவர்தான் குரு.

அறிவியல் மாநாடு நடத்துங்கள். விஞ்ஞானிகள் அங்கு பெரும்பாலும் கூடுவார்கள். பொருளாதார மாநாடு நடத்துங்கள். பொருளாதார அறிஞர்கள் அங்கு பெரும்பாலும் கூடுவார்கள். ஆனால் ஆத்மா, பரமாத்மா குறித்த கூட்டத்துக்கு எல்லோரும் வருவார்கள். ஏனென்றால், மீதி எல்லாம் வெளியில் இருப்பவை. ஆத்மாவும் பரமாத்மாவும் தாம் உள்ளே இருப்பவை.

யார் குரு?

`கு’ என்றால் இருள். `ரு’ என்றால் போக்குபவர். எனவே, இருளைப் போக்குபவராகிறார் குரு. அஞ்ஞானம் என்ற இருளைக் களைந்து ஞானம் எனும் ஒளியைத் தருபவர் அவரே. குரு என்பவர் வேதங்களைப் படித்து ஞானம் உள்ளவராக இருக்க வேண்டும். கற்றபடி நடப்பவராக இருக்க வேண்டும். அந்த ஞானத்தை மற்றவருக்குக் கற்றுக்கொடுப்பவராக இருக்க வேண்டும். நாம் ஞானம் மட்டும் பெற்றால் போதாது. மற்றவர்களுக்கு சேவை செய்யாவிட்டால் அந்த ஞானம் பயனற்றது.

எல்லா மந்திரங்களும் குருவின் மூலமாக வந்தால் தான் பயனளிக்கும்.நவரசங்களில் ஒன்றான 'சாந்தி ரசம்' தியானத்தின் மூலம் கிட்டும். மனம் கலங்கி இருக்கும்போது எந்த ஒரு செயலையும் சரியாகச் செய்ய முடியாது. இது மனத்தைச் சுற்றி இருக்கும் அழுக்கைக் குறிக்கும். இந்த அழுக்கைத் தியானம் மூலம் நீக்கினால் மனம் தெளிவடையும். வேதங்களில் காட்டப்படும் `பூமா’ என்ற உயர்ந்த நிலையை நாம் தியானம் மூலமே அடைய முடியும்.

நீர்தான் குரு

எதிலும் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எங்கோ இருக்கும் சூரியனின் வெப்பத்தில்தான் தாமரை மலருமா? குவிந்திருக்கும் தாமரையைப் பறித்து அதன் அருகே பானையில் தணலைக் கொட்டி வைத்தார். வெப்பத்தில் தாமரை கருகிவிட்டது.

இப்படிச் செய்தால் கருகாமல் என்ன செய்யும் என்றனர் பலர். சரி, அப்படியானால் வேறொரு முயற்சி மேற்கொள்கிறேன் என்றபடி, தாமரையைப் பறித்துக் கட்டாந்தரையில் போட்டார். வெயில் ஏற ஏற தாமரை மலரவில்லை. கருகிவிட்டது.

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் ஆகிறது என்று நொந்துகொண்டார் அவர். நீரில் தாமரை இருந்தால்தான் சூரியனின் கதிர்களால் அது மலரும். இங்கே நாம் தான் தாமரை. சூரியனின் கதிர்கள் தாம் இறைவனின் அருள். நீர்தான் குரு. குருவின் மூலமே இறைவனின் அருளை எளிதாகப் பெறலாம். உடலைத் தாண்டி உயிரை மட்டும் எங்கும் பார்க்கும்போது எல்லோரும் ஒன்றுதான். அவ்வாறு இருந்தால் வேற்றுமை இல்லாமல் சண்டையில்லாமல் ஒற்றுமை
நிலவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x