Published : 31 Dec 2024 06:30 AM
Last Updated : 31 Dec 2024 06:30 AM
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய |
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண ||
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; |
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை ||
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; |
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான் ||
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ |
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 16)
ஆண்டாளின் தோழிகள் வீடுவீடாகச் சென்று தங்கள் தோழிகளை பாவை நோன்புக்கு அழைக்கின்றனர். அனைவரும் நந்தகோபனுடைய திருமாளிகைக்கு வரும்போது வாயிற்கதவு மூடியிருப்பதைக் காண்கின்றனர். வாயிற்காப்போனிடம், “ஆயர்பாடியின் தலைவனாக வீற்றிருக்கும் நந்தகோபனுடைய அரண்மனை மற்றும் அதன் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளை உடனே திறப்பாய். எங்கள் நோன்பின் பலனைத் தருவதாக நேற்றே கண்ணன் வாக்களித்துள்ளான். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பறை வழங்குவதாகவும் கூறியுள்ளான். கண்ணனை துயில் எழுப்ப திருப்பள்ளியெழுச்சி பாடி அந்தப் பறையை பெற்றுச் செல்லவே நாங்கள் வந்துள்ளோம். மறுப்பேதும் தெரிவிக்காமல் எங்கள் மீது கருணை காட்டி உடனே கதவைத் திறந்துவிட வேண்டும்” என்று தோழிகள் வேண்டுகின்றனர்.
இயற்கையை மதித்து நடப்போம்..!
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் |
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் ||
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் |
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் ||
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் |
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு ||
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே |
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை 16)
கடல்நீர் முழுவதையும் அருந்திவிட்டு மேலே சென்ற மேகங்கள், சிவபெருமானுக்கு பிரியமான பார்வதி தேவியைப் போன்று கருமை நிறத்தில் காணப்படுகின்றன. அனைவரையும் ஆளும் ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. அவள் திருவடியில் உள்ள பொற்சிலம்புகளின் ஒலி போல் இடி முழக்கம் கேட்கிறது. அவளது புருவம் போல் வானவில் தோன்றியுள்ளது. நம் மனதை ஆளும் அம்பிகை, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கும் அருள்மழை போல், மழையே! நீ விடாமல் பொழிய வேண்டும். ஒவ்வொருவரும் இயற்கையையும் (அறிவியல்) அம்பிகையையும் (ஆன்மிகம்) மதித்து நடக்க வேண்டும் என்று இப்பாடலின் மூலம் மாணிக்கவாசகர் அறிவுறுத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT