Published : 29 Dec 2024 02:58 PM
Last Updated : 29 Dec 2024 02:58 PM

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருப்பாவை முற்றோதுதல் மாநாடு: ஆயிரக்கணக்கான பெண்கள் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழுமம் சார்பில் 6-வது ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு மற்றும் முப்பதும் தப்பாமே சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், கொங்கு மண்டலம் ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் மங்களாசாசனம் செய்தனர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டில் ஆண்டாள் மற்றும் திருப்பாவை சிறப்புகள் குறித்து பாஜக மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா, வேதபிரான் பட்டர் சுதர்சன், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் பத்மாவதி, நம்பிநாராயணன் ஆகியோர் பேசினர்.

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் முப்பதும் தப்பாமே சீர்வரிசை ஊர்வலத்தை ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர், அமைச்சர் நமச்சிவாயம், ஆர்.ஆர் மருத்துவமனை ராம்சிங் போஸ் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பட்டுப்புடவை, பழங்கள், மஞ்சள், துளசி, பூ, வளையல் உள்ளிட்ட தங்கள் விரும்பிய பொருட்களை சீர்வரிசை தட்டில் வைத்து, திருப்பாவை பாடல்கள் பாடியவாறு நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று ஆண்டாள் சந்நிதியில் சமர்ப்பித்தனர்.

ஆண்டாள் கோயில் ஸ்தானீகம் ரமேஷ் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். வி.ஹெச்.பி திருக்கோயில் திருமடங்கள் பிரிவு தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், கோதை நாச்சியார் தொண்டர் குழுமம் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x