Published : 26 Dec 2024 02:28 AM
Last Updated : 26 Dec 2024 02:28 AM

சபரிமலையில் இன்று மண்டல பூஜை: தங்க அங்கி அணிவித்து வழிபாடு; 23-ம் தேதி வரை 31 லட்சம் தரிசனம்

சபரிமலை: சபரிமலை​யில் மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு நடை அடைக்​கப்​படு​கிறது. மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்​டும் திறக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து திரு​வாங்​கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறி​யுள்ள​தாவது: சபரிமலை​யில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முதல் கட்டயாத்​திரை மண்டல பூஜை​யுடன் நிறைவடை​யும். இந்த மண்டல பூஜையை தந்திரி கண்டரரு ராஜீவரு இன்று (டிச.26) மதியம் 12.30 மணிக்கு தொடங்​கு​கிறார். மண்டல பூஜை மற்றும் நெய் அபிஷேகத்​துக்கு பிறகு ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு 11 மணிக்கு மூடப்​படும். இத்துடன் சபரிமலை​யில் முதல்​கட்ட யாத்​திரை நிறைவடைகிறது.

அதன்​பிறகு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை டிசம்பர் 30-ம் தேதி திறக்​கப்​படும். மகரஜோதி நிகழ்ச்சி ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். இதற்​கிடையே, சபரிமலை​யில் அடுத்த முக்கிய நிகழ்வான தங்க அங்கி ஊர்வலம் பத்தனம்​திட்​டா​வில் உள்ள ஆரன்​முலா பார்த்​தசாரதி கோயி​லில் கடந்த 22-ம் தேதி தொடங்​கியது. இந்த ஊர்வலம் நேற்று மாலை பம்பை வந்தடைந்​தது. அங்கு ஊர்வலத்தை தேவசம் துறை அமைச்சர் வாசவன் வரவேற்​றார். பின்னர், ஊர்வலம் சபரிமலையை சென்​றடைந்து. ஐயப்​பனுக்கு தங்க அங்கி அணிவிக்​கப்​பட்​டது. இன்று மீண்​டும் ஐயப்​பனுக்கு தங்க அங்கி சாத்​தப்​பட்டு, தீபாராதனை காட்​டப்​படு​கிறது. அத்துடன், மண்டலகால பூஜைகள் நிறைவடைகின்றன.

சபரிமலை​யில் பக்தர்கள் கூட்​டத்தை கட்டுப்​படுத்த ஆன்லைன் முன்​ப​திவு மூலம் நேற்று 50,000 பக்தர்​களுக்கு அனுமதி அளிக்​கப்​பட்​டது. இன்று 60 ஆயிரம் பக்தர்​களுக்​கும் அனுமதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதவிர ஸ்பாட் புக்​கிங் முறை​யில் 5,000 பேருக்கு அனுமதி அளிக்​கப்​படு​கிறது. மகரவிளக்கு பூஜைக்காக ஜனவரி 13-ம் தேதி 50,000 பக்தர்​களுக்​கும் ஜனவரி 14-ம் தேதி 40,000 பக்தர்​களுக்​கும் அனுமதி வழங்​கப்​படும்.

கடந்த 23-ம் தேதி வரை சபரிமலை​யில் 30,87,049 பக்தர்கள் தரிசனம் செய்​துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 4.46 லட்சம் பக்தர்கள் கூடு​தலாக சபரிமலை வந்துள்ளனர். கடும் வெள்ளம் காரணமாக பம்பா சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நிறுத்​தப்​பட்​டது. அதை மீண்​டும் தொடங்க ​திரு​வாங்​கூர் தேவசம் ​போர்டு ​முடிவு செய்​துள்ளது. இவ்​வாறு அவர் கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x