Last Updated : 22 Dec, 2024 09:36 PM

 

Published : 22 Dec 2024 09:36 PM
Last Updated : 22 Dec 2024 09:36 PM

மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம் கிளம்பியது: வழிநெடுகிலும் பக்தர்கள் ஆரவாரம்

தேனி: சபரிமலையில் டிச.26-ம் தேதி ஐயப்பனுக்கு தங்கஅங்கி அணிவித்து மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது. இதற்கான தங்கஅங்கி ரதம் ஞாயிற்றுக்கிழமை (டிச.22) ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலிலின் இருந்து ஊர்வலமாக கிளம்பியது. வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாட்டுடன் பம்பைக்கு 25-ம் தேதி ரதம் வந்தடைய உள்ளது. மண்டல பூஜை நிறைவு பகுதியை எட்டியதால் பக்தர்களின் ஆராவாரத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 16-ம் தேதி முதல் மண்டல காலத்துக்கான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

மண்டல பூஜை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த சனிக்கிழமை (டிச.21) வரை 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4லட்சத்து 45ஆயிரத்து 703 பேர் அதிகரித்துள்ளனர். ஸ்பாட் புக்கிங் தினமும் 10ஆயிரமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்று 22ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 3 நாட்களாகவே தலா 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

உச்சநிகழ்வாக வரும் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அந்நாளில் ஐயப்பனுக்கு 420 பவுன் கொண்ட தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலிலின் காப்பறையில் இருந்து இன்று (ஞாயிறு) கிளம்பியது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இன்று இரவு ஓமல்லூர் ரக்தகண்டஸ்வாமி கோயிலில் ரதம் பாதுகாக்கப்பட்டு நாளை காலை 8 மணிக்கு கிளம்பி கொடுந்துறை சுப்ரமணிய சுவாமி கோயிலிலை சென்றடையும். அடூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் ரதம் டிச.25-ம் தேதி மதியம் 1.30மணிக்கு பம்பையை சென்றடையும்.

அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பிறகு மாலை 3 மணிக்கு தலைச்சுமையாக ஆபரணப் பெட்டி சந்திதானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். சரம்குத்தி எனும் இடத்தில் மாலை 5.15 மணிக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

பின்பு 18-ம் படி வழியே ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்படும். அங்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு, சபரிமலை, மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகள் அருண்குமார் நம்பூதரி, வாசுதேவன்நம்பூதரி உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

தீபாராதனை வழிபாட்டுக்குப் பிறகு மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த கோலத்தில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்பு இரவில் தங்க அணி காப்பறையில் பாதுகாக்கப்பட்டு, டிச.26-ம் தேதி மதியம் 12மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அன்றுடன் மண்டல பூஜை நிறைவு பெறுவதால் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தங்க அங்கி புறப்பாடு மூலம் மண்டல பூஜை நிறைவு பகுதிக்கு எட்டியுள்ளது. இதற்கு இன்னமும் 4 நாட்களே உள்ளதால் பக்தர்கள் ஆரவாரத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை (திங்கள்) மாலை 6.30மணிக்கு சந்நிதானத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பில் கற்பூ தீப ஊர்வலம் நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x