Published : 21 Dec 2024 03:28 AM
Last Updated : 21 Dec 2024 03:28 AM
தேனி: வனப் பாதையில் நடந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை காரணமாக, இந்த பக்தர்கள் சபரிமலையில் அரை மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சபரிமலைக்கு பாதயாத்திரையாக வரும் ஐயப்ப பக்தர்கள், புல்மேடு மற்றும் எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை எனப்படும் பாரம்பரிய வழித்தடத்தில்
செல்கின்றனர். இதில் எருமேலி வனச்சாலையானது, அழுதா நதியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு கடுமையான ஏற்ற இறக்கத்துடன் கூடிய கரடுமுரடான பாதை ஆகும். கடுமையான பனி, மழை இவற்றுடன் யானை உள்ளிட்ட விலங்குகளையும் பாதுகாப்பாக கடந்து சிரமத்துடன் பக்தர்கள் சந்நிதானத்தை அடைகின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் சந்நிதானத்தில் மீ்ண்டும் நீண்ட வரிசையில்பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. எனவே, தங்களுக்கு தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, இப்பாதை வழியே வரும் பக்தர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், கடந்த 18-ம் தேதி முதல் இந்த பக்தர்களுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முக்குழியில் நுழைவுச்சீட்டு முத்திரையிட்டு வழங்கப்படும். வரும் வழியான புதுக்குறிச்சி தாவளை, செரியானவட்டம் ஆகிய இடங்களிலும் முத்திரை குத்தப்படும்.
இந்த 3 முத்திரை உள்ள நுழைவுச் சீ்ட்டுக்களை கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசனத்துக்காக போலீஸார் அனுமதிக்கின்றனர். இதன்படி, வனப்பாதையில் வரும் பக்தர்கள் சபரிமலையில் உள்ள பெரிய நடை பந்தலில் இருந்து தனிப்பாதை வழியே 18-ம் படியேறி, ஐயப்பனை விரைவாக தரிசித்து வருகின்றனர். வரிசையில் காத்திருக்கும் நிலை இல்லாததால், அதிகபட்சம் அரைமணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த கவுசிக் என்ற பக்தர் கூறுகையில், ‘‘12-வது ஆண்டாக பாதயாத்திரையாக சபரிமலைக்கு நடந்து வருகிறோம். 150 பேர் கொண்ட குழுவில், ஆங்காங்கே தங்கி சுமார் ஒன்றரை மாதங்களில் சபரிமலை வந்துள்ளோம். வனப்பாதையில் வரும் பக்தர்களுக்கு அளித்துள்ள இந்த சலுகையால், அரைமணி நேரத்துக்கு உள்ளாகவே தரிசனத்தை முடித்துவிட்டோம். இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’' என்றார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ‘‘முதல் நாளில் புல்மேடு வழியாக 2,516 பேரும், எருமேலி பாதை வழியாக 650 பேரும் வந்தனர். நேற்று முன்தினம் புல்மேடு வழியாக 3,016 பேரும் எருமேலி வழியாக 504 பேரும் வந்தனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு சலுகை தரிசனம் கிடைத்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT