Published : 13 Dec 2024 06:49 PM
Last Updated : 13 Dec 2024 06:49 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிச.13) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டன.
ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். உலக பிரசித்தி பெற்றது. இவ்விழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது.
பின்னர், மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, கடந்த 10-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தனித்தனித் தேர்களில் பவனி வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கார்த்திகைத் தீபத் திருவிழா இன்று (டிசம்பர் 13-ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில், வேத மந்திரங்களை முழங்கி, பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். ஏகன், அநேகன் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்து, பஞ்சபூதங்களும் நானே என்பதை இறைவன் உணர்த்துகின்றார். பின்னர், கோயிலில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அருள்பாலித்த அர்த்தநாரீஸ்வரர்: இதையடுத்து, தங்கக் கொடி மரம் முன்பு தீப தரிசன மண்டபத்தில் மாலை 4 மணி முதல், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அதன்பிறகு, ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்த, உமையவளுக்கு தனது இடபாகத்தை அளித்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக அண்ணாமலையார் எழுந்தருளினார். அப்போது இறைவன், ஆனந்த தாண்டவமாடி, பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார். இந்நிகழ்வு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். பின்னர், தங்க கொடிமரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.
11 நாட்களுக்கு தீப தரிசனம்: இதைத்தொடர்ந்து, மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலையின் உச்சியில் பருவதராஜ குல வம்சத்தினர் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். அப்போது ஜோதியாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை மேகக்கூட்டம் வணங்கியபடி சென்றது. அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு, மகா தீபத்தை தரிசித்தனர்.
மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலின் நவ கோபுரங்கள் மற்றும் பல கட்டிடங்கள் மின்னொளியில் ஜோலித்தன. வாண வேடிக்கைகள் விண்ணில் பாய்ந்தது. கோயில், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். 10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், தேனும் - தினை மாவும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர். ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சிக் கொடுத்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டன. மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.
25 லட்சம் பக்தர்கள் கிரிவலம்: கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, மலையே மசேகன் என்று அழைக்கப்படும் 14 கி.மீ., தொலைவு உள்ள திருஅண்ணாமலையை இன்று (டிச.13) அதிகாலையில் இருந்து கிரிவலம் சென்றனர். மழையின் தாக்கமும் சற்று குறைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை 4 மணிக்கு பிறகு, பக்தர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. விடிய விடிய 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கார்த்திகைத் தீபத் திருவிழாவை தொடர்ந்து, நாளை (டிசம்பர் 14-ம் தேதி) பவுர்ணமி, நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை என்பதால் பக்தர்களை வருகை தொடரும்.
3 நாட்கள் தெப்பல் உற்சவம்: பத்தாம் நாள் உற்சவமான நேற்று (டிச.12), தங்க ரிஷப வாகனங்களில் நேற்று இரவு பஞ்சமூர்த்திகள், மாட வீதியில் பவனி வந்தனர். ஜோதி பிழம்பாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை குளிர்விக்கும் வகையில், ஐயங்குளத்தில் நாளை(14-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கிடையில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடைபெறும். பதினேழு நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் வரும் 17-ம் தேதி நிறைவு பெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT