Published : 12 Dec 2024 04:12 PM
Last Updated : 12 Dec 2024 04:12 PM

தி.மலை தீபத் திருவிழா: அண்ணாமலை உச்சியை அடைந்த மகா தீபக் கொப்பரை! - கொட்டும் மழையில் பயணம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சிக்கு மகா தீபக் கொப்பரை இன்று (டிசம்பர் 12-ம் தேதி) கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. பின்னர் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் கடந்த 10-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி திரு அண்ணாமலையில் கொண்டு செல்லப்படும் மகா தீபக் கொப்பரை.

இதைத் தொடர்ந்து கார்த்திகைத் தீபத் திருவிழா நாளை (டிசம்பர் 13-ம் தேதி) நடைபெற உள்ளன. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்பட உள்ளன. மகா தீபத்தை பருவதராஜ குல சமூகத்தில் ஏற்ற உள்ளனர். மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.

2,668 அடி உயரம் உள்ள மகா தீப மலையை சென்றடைந்த மகா தீபக் கொப்பரை.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு இன்று(டிசம்பர் 12-ம் தேதி) அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன், இதற்கான பணியில் ஈடுபடும் பக்தர்கள் கொண்டு சென்றனர்.

மகா தீபக் கொப்பரையில் சிவ சிவ என எழுதப்பட்டும், ஆண் - பெண் சமம் என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் படம் வரையப்பட்டிருந்தது. இதேபோல், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 கிலோ நெய் மற்றும் திரி-க்காக ஆயிரத்து 500 மீட்டர் காடா துணி ஆகியவை அடுத்தடுத்து கொண்டு செல்லப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x