Published : 12 Dec 2024 03:03 PM
Last Updated : 12 Dec 2024 03:03 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) சந்நிதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், ஶ்ரீவைகுண்டம் வைணவ திருத்தலங்களில் கார்த்திகை மாத கைசிக ஏகாதசி அன்று குளிர்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பெருமாள் மாற்றும் ஆழ்வார்களுக்கு 108 போர்வை சாற்றப்பட்டு, கைசிக புராணம் வாசிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சந்நிதி முன் உள்ள பகல் 10 மண்டபம் எனப்படும் கோபாலாவிசால மண்டபத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர்.
கைசிக ஏகாதசி அன்று மட்டும் கருடாழ்வார் சந்நிதியிலிருந்து புறப்பாடாகி பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 4 மணி முதல் ஆண்டாள், ரெங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் அரையர் சேவை, கைசிகபுராணம் வாசிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT