Published : 29 Nov 2024 12:16 AM
Last Updated : 29 Nov 2024 12:16 AM

11 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை

திருச்செந்தூர் கோயிலில் நடந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு நேற்று யாக பூஜை நடத்தப்பட்டு, யானை தெய்வானை மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை 11 நாட்களுக்கு பிறகு மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை (26), கடந்த 18-ம் தேதி திடீரென ஆக்ரோஷமாகி உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரைத் தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வனம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களின் பராமரிப்பில் யானை இருந்து வருகிறது. யானைப் பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் யானையைக் குளிப்பாட்டி, உணவு வழங்கி வருகின்றனர். யானையின் அருகே பக்தர்கள் யாரும் செல்ல முடியாத வகையில், போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், யானை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் நேற்று காலை ஆனந்த விலாச மண்டபத்தில் யானைக்காக சிறப்பு யாகம், பூஜைகளை வேத விற்பன்னர்கள் நடத்தினர். பின்னர், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பத்தை எடுத்து வந்து யானை மீதும், யானை தங்கியுள்ள மண்டபத்திலும் புனித நீரை தெளித்தனர்.

தொடர்ந்து, 11 நாட்களுக்குப பிறகு யானை தெய்வானை நேற்று மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டது. வெளியே சகஜமாக வந்த தெய்வானை யானையை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x