Last Updated : 21 Nov, 2024 06:59 PM

 

Published : 21 Nov 2024 06:59 PM
Last Updated : 21 Nov 2024 06:59 PM

சபரிமலை அப்டேட்: காட்டுப் பாதை, குளிர் பாதித்தால் 24X7 இலவச ஆயுர்வேத சிகிச்சை வசதி!

தேனி: கற்பாறைகள் நிறைந்த காட்டுப்பாதை, அதீத குளிரில் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிலருக்கு உடல்நிலை வெகுவாய் பாதிக்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சன்னிதானத்தில் 24 மணி நேரமும் ஆயுர்வேத இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக பக்தர்கள் பலரும் வாகனங்களில் பம்பை வந்து பின்பு அங்கிருந்து மரக்கூட்டம், நீலிமேலை, சரங்கொத்தி, அப்பாச்சிமேடு படிப்பாதை வழியே பெரியநடைப் பந்தலை சென்றடைகின்றனர். பாதயாத்திரை பக்தர்களைப் பொறுத்தளவில் சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்தை வந்தடைகின்றனர். இருப்பினும் சபரிமலைக்கு பெரிய பாதை எனப்படுவது எருமேலி வனப் பாதையே ஆகும்.

ஐயப்பன் யாத்திரை சென்ற வழி இது என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் இங்கிருந்து பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை, உடும்பாறை, முக்குழி, கரிவலம்தோடு, கரிமலை வழியாக சன்னிதானத்தை அடைகின்றனர். பாரம்பரிய பக்தர்கள் பலரும் இதில் செல்வதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பாதை அடர் வனப்பகுதியாக இருப்பதுடன், அதிக ஏற்றம், இறக்கத்துடன், கற்பாறைகள் நிறைந்தும் இருக்கின்றன. மேலும் தற்போது மழை பருவம் என்பதால் அதீத குளிர், அடர்பனி என்று உடலை பதம்பார்க்கும் காலநிலையாக உள்ளது.

மத்திய வயதை கடந்த பக்தர்களுக்கு இந்த சூழ்நிலை பெரும் சவாலாகவே இருக்கிறது. இதனால் பலருக்கும் உடல் வலி, ஜலதோஷம், காய்ச்சல், வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நிலையில் இருந்து பக்தர்களை காக்க சன்னிதானத்தில் அரசு சார்பில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கால் வலி, உடல் வலி, கால நிலையில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் உபாதைகள் அனைத்துக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றன.

இது குறித்து இம்மருத்துவ அதிகாரி டாக்டர் எச்.கிருஷ்ணகுமார் கூறுகையில், ”மண்டல காலத்தில் இதுவரை 5,632 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 1,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சிகிச்சை மையம் 24 மணி நேரமும் செயல்படும். மருந்துகளை உடலில் தேய்த்தல், ஆவி பிடித்தல், வலி நீக்கும் எளிய மசாஜ் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்றார். இதன்மூலம் உடல் உபாதை நீங்கி ஐயப்பனை மனம் உருக தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x