Published : 20 Nov 2024 06:01 PM
Last Updated : 20 Nov 2024 06:01 PM
தேனி: ஞாபசக்தி பிரச்சினை, நினைவு தடுமாற்றம் உள்ள வயோதிக பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சபரிமலையில் வழிகாட்டி கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. வழிதவறியவர்களை இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் எளிதாக ஒப்படைக்க முடியும் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டலபூஜை வழிபாட்டுக்காக கடந்த 15-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெரிசலை குறைப்பதற்காக தினமும் 18மணிநேரம் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிகபட்சமாக தினமும் 80ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்தர்களை பாதுகாக்கவும், வழிநடத்தவும் பல்வேறு ஏற்பாடுகள் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வழிதவறும் பக்தர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. இதில் பலரும் பெரியவர்கள் என்பதால் மொபைல் எண் மூலம் தங்கள் குழுவினரை தேடி கண்டறிந்து இணைந்து கொள்கின்றனர். அல்லது அருகில் உள்ள உதவி மையத்தை நாடி அறிவிப்புகள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
இதில் குழந்தைகள், முதியவர்கள் நிலை சற்று சிரமத்தை ஏற்படுத்துகிறது. பல குழந்தைகளால் உரிய பதில் சொல்ல முடிவதில்லை. இதனால் பெற்றோர் மற்றும் குழுவில்ஒப்படைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுடன் வரும் குழந்தைகளுக்கு மணிக்கட்டில் வழிகாட்டி பட்டை பிணைக்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெயர், பெற்றோரின் மொபைல் எண் அழியா மையால் எழுதப்படுகிறது.
இதனால் குழந்தைகள் வழிதவறினாலும் இதனைப் பார்க்கும் ஐயப்ப பக்தர்கள் யாராக இருந்தாலும் உடன் தொடர்புகொள்ள முடியும். மேலும் உதவி மையத்தில் ஒப்படைத்தால் அங்குள்ள அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கவும் உறு துணையாக இருக்கும். இதன்படி 10 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பம்பையில் கேரள போலீஸார் சார்பில் இந்த கைப்பட்டை அணிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதியவர்களைப் பொறுத்தளவில் நினைவு தடுமாற்றம் உள்ளவர்கள். ஞாபசக்தி பிரச்னை உள்ளவர்களுக்கும் அணிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தேவசம்போர்டு ஊழியர்கள் கூறுகையில், குழந்தைகள் மட்டுமல்ல முதியவர்களும் சமயத்தில் வழிமாறி விடுகின்றனர். முதுமை காரணமாகவும், பிராந்திய மொழி மட்டுமே அவர்களுக்கு தெரிவதாலும் பீதி அடைந்து விடுகின்றனர்.
சபரிமலையில் சில தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல்களும் கிடைப்பதில்லை. ஆகவே தேவைப்படுபவர்களின் விருப்பம் அறிந்து இது முதியவர்களுக்கும் அணிவிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே உதவிமையத்தின் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும் முடியும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT