Published : 20 Nov 2024 03:12 AM
Last Updated : 20 Nov 2024 03:12 AM
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், கேரள அரசு ‘சுவாமி சாட்போட்’ என்ற பயண வழிகாட்டி செயலியை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு, சபரிமலைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி, தமிழக தலைமைச் செயலர் பேசியதன் அடிப்படையில், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள தலைமைச் செயலர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில், ஐயப்ப பக்தர்கள் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்வதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பாடுமானால், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘சுவாமி சாட்போட்’ (Swami Chatbot) எனும் வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும் என்றும் தமிழக அரசுக்கு கேரள மாநில பத்தனம்திட்டா ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதால், எதிர்பாராத வகையில் விபத்துகள் ஏதேனும் ஏற்படுமானால் அல்லது அவசர உதவிகள் எதுவும் தேவைப்பட்டால் அத்தகைய தருணங்களில் ‘சுவாமி சாட்போட்’ எனும் பயண வழிகாட்டியை கைபேசி எண் 6238008000 மூலம் Hi என குறுஞ்செய்தி அனுப்பினால், உதவிகள் உடனே கிடைக்கும். அதாவது, காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள், உணவு பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அவசர நேரங்களின்போது உடனடி சேவைகளை பக்தர்களுக்கு அளிக்கிறது.
மேலும், இந்த ‘சுவாமி சாட்போட்’ வாயிலாக சபரிமலைக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கும் நேரங்கள், பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோயில்கள், தங்குமிடங்கள், உணவகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய தகவல்களையும், கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் வருகை தரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், குறித்த காலத்தில் வந்து செல்வதற்கு ஏற்ற வசதிகளையும், பாதுகாப்பு மற்றும் கோயில் தொடர்பான சேவைகளையும் இந்த ‘சுவாமி சாட்போட்” எளிதில் வழங்குகிறது. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்பவர்கள் இந்த விவரங்களை அறிந்துகொண்டு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பாகவும் சென்று வரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT