Published : 20 Nov 2024 12:18 AM
Last Updated : 20 Nov 2024 12:18 AM
கும்பகோணம்: சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சுவாமி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு அந்த கிராம மக்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 13-ம் தேதி மடத்தை பூட்டினர்.
இதையடுத்து, சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர், மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, மடத்தில் உள்ள சிவாக்கரயோகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பண்டாரத்தார் மூலம் நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மடத்தில் ஆதீன அறைக்குள் தினந்தோறும் நடைபெறும் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறவில்லை. இதனால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். எனவே, பிற ஆதீனங்கள் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மடத்தில் வழக்கம்போல நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆதீனத்தின் அறையில் ஆத்மார்த்த பூஜைகள் செய்வது குறித்து, ஆதீனங்களின் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.
இது தொடர்பாக திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் கூறும்போது, “சூரியனார் கோயில் ஆதீனம், எங்கள் ஆதீன கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் எங்களிடம் இருந்துதான், அந்த மடத்தின் ஆதீனப் பொறுப்புகளை பெற்றார். ஆனால், அவர் எங்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல், அரசிடம் ஒப்படைத்துள்ளார். நாங்கள் இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அந்த மடத்துக்கு ஆதீனத்தை நியமிப்பதற்கான அதிகாரம் எங்கள் ஆதீனத்துக்கு மட்டும்தான் உள்ளது. அரசிடம் இருந்து பதில் வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இது தொடர்பாக சூரியனார்கோயில் ஆதீனம் மகாலிங்க சுவாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிளை மடத்தில் தங்கி உள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விரைவில் தெரிவிப்பேன்” என்றார். சூரியனார் கோயில் மடத்துக்கு ஆதீனத்தை நியமிப்பதற்கு, திருவாவடுதுறை ஆதீனத்துக்குத்தான் அதிகாரம் உண்டு எனக் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, “இப்போது அதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT