Published : 17 Nov 2024 08:37 AM
Last Updated : 17 Nov 2024 08:37 AM
சென்னை: கார்த்திகை முதல் நாளான நேற்று, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்ட நிலையில், மண்டல பூஜை நேற்று தொடங்கியது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலை யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பக்தர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கார்த்திகை மாதம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள், ஐயப்பன் கோயில்களில் திரண்டனர்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரம், அண்ணா நகர், மடிப்பாக்கம், புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை 4 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப் பட்டிருந்தன. கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து குருசாமி கையால் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
சாமியே சரணம் ஐயப்பா: சிறுவர்கள், முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பினரும் மாலை அணிந்தனர். மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என மனமுருக வேண்டி, சுவாமி தரிசனம் செய்தனர். முதல் முறையாக சபரிமலைக்கு செல்வோர் கருப்பு உடையும், பலமுறை சென்றவர்கள் காவி, நீல நிற உடையும் அணிந்திருந்தனர்.
இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால், கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே, ஐப்பசி மாதம் முதலே மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தற்போது சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT