Published : 17 Nov 2024 04:19 AM
Last Updated : 17 Nov 2024 04:19 AM
சீரடி: ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சீரடி, ஷனி ஷிங்னாபூர் சிறப்பு சுற்றுலாவுக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 51 சக்தி தலங்களுக்கு செல்ல சிறப்பு விமான சுற்றுலா தொடங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு சிறப்பு விமான சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணம் நவ. 14-ம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் சுற்றுலா பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.19,950 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நவ. 14-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் பக்தர்கள் சீரடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று மாலை சீரடி பாபா சமாதி மந்திரில் தரிசனம் முடித்த பக்தர்கள், மறுநாள் காலை (நவ. 15-ம் தேதி) சிறப்பு வேன் மூலம் சீரடியில் இருந்து 72 கிமீ தொலைவில் உள்ள ஷனி ஷிங்னாபூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சீரடி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சீரடியில் பக்தர்களுக்கு சிறப்பு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சீரடி, ஷனி ஷிங்னாபூர் விமான சுற்றுலா சிறப்பாக அமைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஐ,ஆர்.சி.டி.சி. சார்பில் சிறப்பு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே போல் அரிய தலங்கள், 51 சக்தி பீடங்கள் உள்ளிட்ட கோயில்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றனர். சென்னையில் இருந்து உடுப்பி - முருடேஸ்வருக்கு டிச. 4-ம் தேதி சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 நாள் பயணத்துக்கு ஒரு நபர் கட்டணம் ரூ.30,900. மேலும் சென்னையில் இருந்து குஜராத்துக்கு டிச.6-ம் தேதி சுற்றுலாப் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 நாட்கள் சுற்றுலா பயணத்துக்கு ஒரு நபர் கட்டணம் ரூ.43,000 ஆகும்.
மேலும் 6 நாள் பயணமாக சிங்கப்பூர், மலேசியாவுக்கு நவ.22-ம் தேதியும் (ஒரு நபர் கட்டணம் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 500), துபாய்க்கு நவ.28-ம் தேதியும், இலங்கைக்கு டிச.1-ம் தேதியும் விமானம் மூலமாக சுற்றுலாப் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும், 9003140680, 9003140682 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் அறியலாம். இந்த தகவலை ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT