Last Updated : 15 Nov, 2024 05:56 PM

 

Published : 15 Nov 2024 05:56 PM
Last Updated : 15 Nov 2024 05:56 PM

சபரிமலையில் பக்தர்களுக்காக இலவச வைஃபை வசதி தொடக்கம்

கோப்புப்படம்

குமுளி: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும், பல்வேறு அவசர கால தொடர்புகளுக்காகவும் சபரிமலையில் பிஎஸ்என்எல் சார்பில் இலவச வைஃபை வசதி இன்று (நவ.15) தொடங்கி வைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மண்டல கால பூஜைக்கான நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 41நாட்கள் வழிபாடுகள் நடைபெறும். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவர். சபரிமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் சில தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பிலான சிக்னலில் தடை ஏற்படுவது உண்டு. இதனால் குழுவில் தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொள்வது, அவசர கால தொடர்புகளிலும் பக்தர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக பிஎஸ்என்எல் சார்பில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மண்டல கால வழிபாடுகள் தொடங்கி உள்ளதால் திருவனந்தபுரம் தேவசம்போர்டுடன் பிஎஸ்என்எல் இணைந்து இந்த வசதியை இன்று தொடங்கி உள்ளது. இதன்படி ஒரு சிம் கார்டுக்கு அரை மணி நேரம் இந்த வசதியை பெறலாம். தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் பம்பையில் இதனை தொடங்கி வைத்தார்.

இலவச வைஃபை சேவையை சோதனை செய்த தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் மற்றும் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த்

தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் கே.ஜோதிஷ்குமார், இணை இயக்குநர்அபிலாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்காக நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 48 இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் சபரிமலை அலுவலகப் பொறுப்பாளர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்தார். இதுதவிர சபரிமலை வழித்தடத்தில் பிஎஸ்என்எல் சார்பில் புதியதாக 4ஜி டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வைஃபை வசதியை பெறுவது எப்படி? - பிஎஸ்என்எல்லின் வைஃபை சேவையைப் பெற முதலில் போனில் உள்ள வைஃபை ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். பின்பு திரையில் காட்டப்படும் பிஎஸ்என்எல் வைஃபை அல்லது பிஎஸ்என்எல் பிஎம்வாணி எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்பு திறக்கப்படும் வலைப்பக்கத்தில், பத்து இலக்க மொபைல் எண்ணைத் தட்டச்சு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைபேசிக்கு 6 இலக்க எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதனை உள்ளீடுசெய்ததும் வைஃபை சேவையைப் பெறலாம். இதற்காக சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் 300 எம்பிபிஎஸ் அப்லிங்க் வேகத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x