Published : 14 Nov 2024 05:09 AM
Last Updated : 14 Nov 2024 05:09 AM
சென்னை: சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், அக். 28-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகே) உள்ள சுதர்மா இல்லத்தை வந்தடைந்தார். நவ.13-ம் தேதி (நேற்று) வரை சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்ட சுவாமிகள், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, இல.கணேசன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில், வடபழனி ஸ்ரீ முருகன் கோயில், மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த சுவாமிகள், திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும், பல வேத பாடசாலைகளுக்கும் சென்று வேதவிற்பன்னர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். நேற்று முன் தினம் மாலைசிருங்கேரி மடத்தின் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி கிளைக்கு விஜயம் செய்த சுவாமிகள், அங்கு நடைபெற்ற குருவந்தனம் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆதிசங்கரர் அவதாரத்தின் காரண, காரியம், தத்துவம் குறித்து பக்தர்களுக்கு தனது அனுக்கிரஹ பாஷணத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்.
நேற்று கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். கும்பாபிஷேக வைபவத்தை ஒட்டி நடைபெற்ற சதசண்டி மற்றும் மகாருத்ர மகாயாகத்திலும், சுவாமிகள் கலந்து கொண்டார்.
விஜய யாத்திரை நிறைவு: கடந்த 15 நாட்களாக, தமது விஜய யாத்திரைக்கு பலவித ஏற்பாடுகளை செய்த மடத்தின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும், சுவாமிகள் ஆசி வழங்கினார். அவர்களின் சேவையை பாராட்டிய சுவாமிகள், அவர்கள் அனைவரும் இதுபோன்ற பகவத் மற்றும் ஆச்சார்ய சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று மாலை 4 மணி அளவில், சுவாமிகள் விஜய யாத்திரையை நிறைவு செய்து, திருப்பதி புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT