Published : 10 Nov 2024 01:13 PM
Last Updated : 10 Nov 2024 01:13 PM
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா தொடங்கியுள்ள நிலையில், அரசு சார்பில் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பிறகு, திருமுறை நூலை யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில்,ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, மாவட்ட ஆட்சியர் மா. பிரியங்கா பங்கஜம்,மேயர் சண். ராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள, சதய விழா குழு தலைவர் து. செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு, தருமை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த இத்திருக்கோயில் மிக புண்ணியம் பெற்றது. திருவிசைப்பா பாடல் பெற்ற தலம் இது. இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய கோயிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜ சோழன் செய்துள்ளார்.
விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி, நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யகொண்டான் மலையில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள். அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு.
எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன். தமிழகத்தில் பெரிய கோயில்கள் மட்டுமின்றி, சிறிய கோயில்களுக்கும் கும்பாபிஷேகங்களை இந்த அரசு நடத்துவதை சாதனையாக பார்க்கிறேன்.
பெரிய கோயில்களைக் காட்டிலும், கிராம கோயில்களின் உண்டியல் வருமானம் அதிக அளவில் உள்ளது. கிராம கோயில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த கோயில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. இந்த அரசு கோயில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. பிறகு மாலை, 1039 கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT