Published : 08 Nov 2024 08:28 PM
Last Updated : 08 Nov 2024 08:28 PM
குமுளி: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சத்திரம் வனப்பாதையில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் விலங்குகளை ட்ரோன் மூலம் கண்காணித்து பக்தர்களை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக 15-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட உள்ளது. தமிழக அளவில் சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதன்வழியே தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் செல்வர். தேனி மாவட்ட எல்லையான குமுளியை அடைந்ததும் அங்கிருந்து சபரிமலைக்கு பல்வேறு வழித்தடங்கள் உள்ளன.
இதில் குமுளி அருகே வண்டிப் பெரியாறில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் சத்திரம் சென்று அங்கிருந்து 12 கி.மீ., காட்டு வழியாக நடந்து சன்னிதானம் செல்லலாம். பாதயாத்திரை வரும் பலரும் இப்பாதையிலே செல்வர். தற்போது மண்டல பூஜைக்கு ஒருவாரமே உள்ளதால் வண்டிப்பெரியாறு, சத்திரம், புல்மேடு வனப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை கேரள வனத்துறை தொடங்கி உள்ளது.
பெரியாறு புலிகள் சரணாலய மேற்கு துணை இயக்குநர் எஸ்.சந்தீப் மேற்பார்வையில் வனத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்றுவதுடன், போலீஸ் மற்றும் தேவசம்போர்டு ஊழியர்களுக்கான கொட்டகை அமைக்கும் பணியையும் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறுகையில், "ஐயப்ப பக்தர்களுக்கு அரை கிலோ மீட்டர் இடைவெளியில் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். வனவிலங்குகளிடம் இருந்த தற்காத்துக்கொள்ள பக்தர்களுக்கு முன்னும், பின்னும் பாதுகாப்புக்காக வனத்துறையினர் செல்வர். வனவிலங்குகள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT