Published : 08 Nov 2024 03:10 PM
Last Updated : 08 Nov 2024 03:10 PM

அண்ணாமலையார் கோயிலில் மகா ரதம் வெள்ளோட்டம்: அரோகரா முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் இன்று (நவம்பர் 8-ம் தேதி) வெற்றிகரமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் ‘மகா தேரோட்டம்’ உலக பிரசித்தி பெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிப்பர். ஒவ்வொரு திருத்தேரும் நிலையை வந்தடைந்த பிறகு, அடுத்த திருத்தேரின் புறப்பாடு இருக்கும்.

ஓரே நாளில் 5 திருத்தேர்கள் பவனி வருவது சிறப்புமிக்கது. காலையில் தொடங்கி நள்ளிரவு வரை மகா தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு மகா தேரோட்டம், டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில், ரூ.70 லட்சத்தில் பெரியத் தேர், மகா ரதம் என்றழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் புதுப்பிக்கப்பட்டது. மகா ரதமானது 59 அடி உயரம், 200 டன் எடை கொண்டது.

இதையடுத்து, அண்ணாமலையாரின் மகா ரதம் வெள்ளோட்டம் இன்று(நவம்பர் 8-ம் தேதி) நடைபெற்றது. மங்கல இசை மற்றும் சிவ கைலாய வாத்தியம் ஒலிக்க, சிவனடியார்களின் சங்கு நாத ஓசை ஒலித்தது. மேலும் வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்கி, மகா தீபாராதனையை காண்பித்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்கதர்களின் முழக்கம் விண்ணை முட்ட, காலை 8.14 மணிக்கு மகா ரதம் புறப்பட்டது.

மெல்ல மெல்ல அசைந்து மாட வீதியில் மகா ரதம் பவனி வந்தது. பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசித்தனர். நண்பகல் 12.21 மணிக்கு, நிலையை மகா ரதம் வந்தடைந்தது. 4 மணி நேரம் 7 நிமிடத்துக்கு மகா ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. மகா ரதத்தை பின்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனம் சென்றது. 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x