Published : 05 Nov 2024 05:12 AM
Last Updated : 05 Nov 2024 05:12 AM
சென்னை: சக்தி வழிபாட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்று சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் அருளுரை வழங்கியுள்ளார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், அக். 28-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகே) உள்ள சுதர்மா இல்லத்தை வந்தடைந்தார். நவ.13-ம் தேதி வரை சென்னையில் முகாமிட உள்ள சுவாமிகள், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்தவகையில் நேற்று முன்தினம், சிருங்கேரி மடத்தின் சென்னை ஜார்ஜ் டவுன் கிளைக்கு வருகை புரிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மடத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்த சுவாமிகள், பக்தர்கள் மத்தியில் பேசியதாவது: கிறிஸ்தவ மதத்தை தழுவிய கிழக்கு இந்திய கம்பெனியின் ஆங்கிலேய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில், சிருங்கேரி மடத்தின் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போது கிருஷ்ணப்பா அக்ரஹார தெருவில் உள்ள இந்த மடம் அமைந்திருக்கும் இடமானது,ஆங்கிலேய அரசால் 1872-ம்ஆண்டு, மடத்தின் ஆன்மிக செயல்பாடுகளுக்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த மடமே சென்னையில் இருக்கும் சிருங்கேரி மடத்தின் கிளை மடங்களில் முதன்மையான மடம். இந்த மடம் 32-வது பீடாதிபதி ஸ்ரீ நரசிம்ம பாரதிசுவாமிகளால் நிறுவப்பட்டது என்றார்.
பின்னர் கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். மாலையில் சுதர்மா இல்லத்தில் பக்தர்களுக்கு வழங்கிய அருளுரையில் ஆதிசங்கரரின் உபதேச மொழிகளை எடுத்துரைத்தார்.
நேற்று சுதர்மா இல்லத்தில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் பங்கேற்ற சுவாமிகள் பக்தர்களுக்கு வழங்கிய அனுக்கிரஹ பாஷணத்தில் கூறியதாவது:
மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி ஸ்வரூபிணியாக சண்டிகா பரமேஸ்வரி விளங்குகிறார். அவரது ஆராதனைகளில் மிகப் பெரிய ஆராதனையாக இருக்கும் மகா சஹஸ்ரசண்டி ஹோமம் இந்த இடத்தில் நடைபெற்றது மிகவும் சிறப்பானது. அம்பாளுக்கு மிகவும் இஷ்டமான தேவி மகாத்மிய பாராயணம், சிறந்த வைதீகர்களால் 1,000 முறை செய்யப்பட்டு, ஹோமத்தின் பூர்ணாஹூதி நடைபெற்றுள்ளது. எந்த இடத்தில் இப்படிப்பட்ட சண்டி ஹோமம் நடைபெறுகிறதோ அந்த இடத்தில் நல்ல மழை பெய்யும் என்றும், அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள் என்றும் சாஸ்திரங்கள் உரைக்கின்றன. அம்பாளின் ஆராதனை (சக்தி வழிபாடு) என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
பகவத் கீதையை உரைப்பதற்கு முன்னர் மகாபாரதத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, “நீ அம்பாளை நினைத்து தவம் செய்து துர்கையின் ஆசிகளைப் பெற வேண்டும். அப்போதுதான் உனக்கு வெற்றி கிட்டும்” என்றார். அதன்படி அர்ஜுனன் அம்பாளை நினைத்து தவம் செய்ததன் பலனாக, அம்பாளிடம் இருந்து பல ஆயுதங்கள், அஸ்திரங்கள் கிடைக்கப் பெற்றான். அம்பாள் மீது அர்ஜுனன் ஒரு ஸ்லோகத்தையும் இயற்றியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அரக்கர்களால் தேவர்கள் மற்றும் தேவதைகளுக்கு இன்னல்கள் ஏற்பட்டபோது, தேவி அனைத்து அரக்கர்களையும் வீழ்த்தி, தேவர்கள் மற்றும் தேவதைகளுக்கு அருள்பாலித்தார். மகரிஷிகள், ரிஷிகள் அனைவரும் தேவியை உபாசித்துள்ளனர். அம்பாளின் அனுக்கிரஹத்தால் காளிதாஸர் மிகப் பெரிய மகாகவியாக உருவானார்.
ஆதிசங்கர பகவத் பாதர் அம்பாளின் தலங்களுக்குச் சென்று ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். சவுந்தர்ய லஹரி போன்ற ஸ்லோகங்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும். இந்த பீடத்தில் சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்து அம்பாள் ஆராதனையை தொடங்கி வைத்துள்ளார். சக்தி இல்லை என்றால் எந்த செயலும் நடைபெறாது என்பது நடைமுறை உண்மை. சக்தியின் அருள் அனைவருக்கும் வேண்டும். சக்தி ஆராதனை செய்யும் அனைத்து இடங்களிலும் வெற்றி இருக்கும்.
அம்பாள், மகா காளியாக இருந்துபக்தர்களின் துன்பங்களைப் போக்குகிறார். மகா லட்சுமியாக இருந்து பக்தர்களுக்கு தேவையான செல்வத்தை அளிக்கிறார். மகா சரஸ்வதியாக இருந்து அனைவருக்கும் கல்வியை அளிக்கிறார். பரப்பிரம்ம ஸ்வரூபிணியாக இருந்து ஞானிகளுக்கும் அனுக்கிரஹம் செய்கிறார். சக்தி வழிபாட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் என்றார்.
சண்டி ஹோமத்துக்குப் பிறகு சுவாமிகள், சோமவார பூஜை செய்து வழிபட்டார். நங்கநல்லூர் அபிநவ கணபதி கோயிலில் நவ. 6-ம் தேதி, சிருங்கேரி மடத்தின் மேற்கு மாம்பலம் கிளையில் நவ. 7-ம் தேதி,தி.நகர் கிளையில் நவ.8-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசிவழங்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT