Published : 02 Nov 2024 01:20 PM
Last Updated : 02 Nov 2024 01:20 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சுவாமிகள் மலைக்கோயிலில் இருந்து படியிறங்கி, உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து வரும் 12-ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இந்த விழாவை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
நவ. 2-ம் தேதியான இன்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி ஆகிய சுவாமிகள் மலைக்கோயிலிலிருந்து படியிறங்கி, உற்சவ மண்டபம் எழுந்தருளினர். அங்கு சுவாமிகள் சிறப்பு வழிபாடும், தொடர்ந்து இரவு படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர்.
நவ. 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரதான விழாவான வரும் 7-ம் தேதி காலை 108 சங்காபிஷேகம், மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 8-ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரி, இரவு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் ச.சிவக்குமார், துணை ஆணையர் தா.உமாதேவி, கண்காணிப்பாளர் வி.பழனிவேலு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT