Published : 21 Aug 2014 12:00 AM
Last Updated : 21 Aug 2014 12:00 AM
அறிஞர்களும் ஞானிகளும் தத்துவ மேதைகளும் கூடிய சபை அது. அங்கே ஒரு ரிஷி தன் சீடர்களுடன் நுழைகிறார். அவர் பெயர் யாக்ஞவல்கியர்.
ஜனக மகாராஜாவின் சபை அது. ஜனகர் ராஜ ரிஷி என்று கருதப்படுபவர். அவரது சபையில் எப்போதும் தத்துவ விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும். அந்தச் சபையில் குவிந்துள்ள அறிவாளிகளிடம் வாதிட யாக்ஞவல்கியர் வந்திருக்கிறார். யாக்ஞவல்கியர் மிகவும் மதிக்கப்பட்ட ஞானி. பல்வேறு தத்துவ நூல்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்.
“என்னுடன் போட்டியிட எவராவது விரும்புகிறார்களா ?” என்று யாக்ஞவல்கியர் கேட்கிறார்.
எவரும் யாக்ஞவல்கியருக்கு பதில் சொல்லவில்லை.
அப்போது சபையின் வலது கோடியில் சிறிய சலசலப்பு. எல்லோர் கவனமும் அங்கே குவிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு இளம் பெண் வருகிறாள்.
யாக்ஞவல்கியர் வியப்படைகிறார். பெண்கள் சபைகளுக்கு வராத காலம் அது. இவள் எப்படி வந்தாள் என்ற கேள்வி ரிஷியின் மனதில் ஓடுகிறது. இந்தப் பெண் என்ன செய்யப்போகிறாள் என்ற கேள்வியும் எழுகிறது.
அவள் பெயர் கார்க்கி. தத்துவ ஞானமும் வாதத் திறமையும் மிகுந்த இளம் பெண். அவளை வாதத்தைத் தொடங்குமாறு ஜனகர் அழைக்கிறார்.
“உலகம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?” என்று கார்க்கி கேட்கிறாள்.
“உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது!” என்கிறார் யாக்ஞவல்கியர்.
கார்க்கி தொடர்ந்து பேசுகிறாள். “உலகைப் படைத்தது இறைவன் என்றால் இறைவனைப் படைத்தது யார்?”
“இறைவனை யாரும் உண்டாக்க வில்லை ! அவன் தானாகவே தோன்றினான்!”
“இறைவன் தானாகவே தோன்றினான் என்றால் உலகமும் தானாகவே தோன்றியிருக்கலாம் அல்லவா?” என்று கார்க்கி கேட்கிறாள். தொடர்ந்து அவள் கேள்விகளை அடுக்குகிறாள்.
“உலகம் இறைவனால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை என்பதையும் என்ன காரண காரியங்களை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கார்க்கி கேட்கிறாள்
யாக்ஞவல்கியர் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் மேற்கொண்டு எதுவும் பேசாததால் அவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதுபோல ஆனது.
அவர் ஏன் அமைதியாக இருந்தார்? பெரிய ஞானி என்று போற்றப்படும அவருக்கு இதற்குப் பதில் தெரியாதா?
உலகைப் படைத்தது யார்? இறைவன் என்றால் அல்லது ஏதோ ஒரு மகா சக்தி என்றால் அந்த இறைவனை, மகா சக்தியைப் படைத்தது யார்?
இவை மனித குலத்தின் ஆதிநாட்களிலிருந்து கேட்கப்பட்டுவரும் கேள்விகளாகும். இந்தக் கேள்விகளைத் இதனைத் தர்க்கரீதியாக எதிர்கொள்வது பொருத்தமானதல்ல. தர்க்கம் என்பது முழுக்க முழுக்கக் காரண காரியச் சிந்தனைக்கு உட்பட்டது. அதாவது காரியம் என்ற ஒன்று இருந்தால் அதற்குக் காரணம் என்ற ஒன்று இருக்கும். மரம் காரியம் என்றால் விதை காரணம். இதேபோல் இந்தப் பிரபஞ்சம் காரியம் என்றால் பரம்பொருள் காரணம் என்று சொல்லலாம்.
ஆனால் அந்தப் பரம்பொருளுக்கான காரணம் அல்லது ஆதாரம் என்ன என்னும் கேள்வி எழும். பரம்பொருள் என்பது காரணமற்ற காரியம். பிரிதொன்றிலிருந்து அல்லது வேறொரு சக்தியிலிருந்து தோன்றாதது என்பதே இதற்கான தத்துவரீதியான பதில்.
காரணமற்ற காரியத்தைத் தர்க்கரீதியான சிந்தனை மூலம் விளக்கவோ உணரவோ முடியாது. அது தீவிரமான சாதகத்தின் வழியாக, ஆழ்ந்த தேடலின் விளைவாக, கண்டடையவும் அனுபவிக்கவும்கூடியது.
இதை உணர்ந்தவர்களால் விளக்க முடியாது. எல்லைக்குட்பட்ட சொற்கள் இதை விளக்கும் சக்தி அற்றவை என்கிறார்கள் ஞானிகள். கண்டவர் விண்டிலர் என்பது இதைத்தான்.
விண்டு சொல்ல முடியாத பரம்பொருள் தத்துவத்தைத் தர்க்க நிலையில் வைத்துப் பேசியதால்தான் யாக்ஞவல்கியர் மேற்கொண்டு அந்தப் பேச்சை நிறுத்திவிட்டார் என்று அனுமானித்துக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT