Published : 12 Oct 2024 03:40 PM
Last Updated : 12 Oct 2024 03:40 PM

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: தூத்துக்குடி நவதிருப்பதி தலங்களில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று நவதிருப்பதி கோயிலான நத்தம் விஜயாசனார் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி, தாயார்களுடன் அருள்பாலித்தார்.

தூத்துக்குடி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.12) பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.12) நவதிருப்பதி ஸ்தலங்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் ஆகிய நவதிருப்பதி கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கோயில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து, நவதிருப்பதி கோயில்களுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் மூலவர் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்புளியங்குடி காசினிவேந்தன் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் காட்சி அளித்தனர்.

கோவில்பட்டி நீலா தேவி, பூ தேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x