Published : 09 Oct 2024 08:08 AM
Last Updated : 09 Oct 2024 08:08 AM

மோகினி அலங்காரத்தில் மலையப்பர் பவனி: கருடசேவையில் 3 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்றிரவு கருட வாகனத்தில் உற்சவ மூர்த்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை, உற்சவரான மலையப்பர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5-ம் நாள் விசேஷநாளாக கருதப்படுகிறது. ஏனெனில் காலையில் மலையப்பர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். மாலையில் கருட வாகனத்தில் காட்சியளிக்கிறார். ஆதலால் 5-ம் நாள் விசேஷம் என கூறப்படுகிறது. திருமலையில் நேற்று மட்டும் வாகனமண்டபத்திலிருந்து சுவாமி புறப்பாடு நிகழாமல்,கோயிலில் இருந்து நேரடியாக மோகினி அலங்காரத்தில் மைசூர் மகாராணி அளித்த பல்லக்கில் திருமாட வீதிக்கு சுவாமி புறப்பட்டு வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். உடன் ஸ்ரீ கிருஷ்ணரும் தனி பல்லக்கில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மோகினி சமேதமாய் ஸ்ரீ கிருஷ்ணரின் வீதியுலாவை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டிருந்தனர். சுவாமியை தரிசித்ததும், கோவிந்தா கோவிந்தா என அவரது திருநாமத்தை உச்சரித்தும் கோஷமிட்டும் வழிபட்டனர். மாட வீதிகளில் நேற்று 14 மாநிலங்களை சேர்ந்த 490 நடனக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் காண்போரை மிகவும் கவர்ந்தது.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்றிரவு கருட வாகனத்தில் உற்சவ மூர்த்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கோவிந்தா கோவிந்தா எனும் பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டும் வகையில் இருந்தது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றிருப்பார்கள் என கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x