Published : 05 Oct 2024 04:29 AM
Last Updated : 05 Oct 2024 04:29 AM
புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாட்களும் வழிபடும்போது, முதல் மூன்று நாட்கள் துர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வணங்க வேண்டும்.
கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள். ஆதிபராசக்தியை துர்கையாக வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி தேவி வடிவில் வழிபட்டால் செல்வமும், சரஸ்வதி தேவியாக வழிபட்டால் கல்வியும், பார்வதி தேவியாக வழிபட்டால் ஞானமும் பெருகும்.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் பத்து வயதுக்கு உட்பட்ட கன்னியரை வழிபட வேண்டும். இக்கன்னியருக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி ஸ்ரீரஸ்து, ஸ்ரீயுக்தம் என்ற சொற்களை முதலாகக் கொண்ட மந்திரங்களைக் கூறி பூஜிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் அம்பாளாக நம் இல்லத்துக்கு எழுந்தருள்வர் என்பது ஐதீகம். ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும். பெண் குழந்தைகளுக்கு பாத பூஜை செய்து உணவளித்து வழிபட வேண்டும். அவர்களுக்குப் புதிய ஆடை, தாம்பூலம் கொடுக்க வேண்டும். இதனால் நமது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
நவராத்திரி மூன்றாம் நாளான திருதியை மகிஷாசுரனை அழித்த வாராகியை வணங்க வேண்டும். 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும். முன்னதாக மலர்களை வைத்து கோலம் போட வேண்டும். காம்போஜி, கல்யாணி ராகங்களில் பாடல்களைப் பாடி, செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சிக்க வேண்டும். கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் ஆகியவற்றில் எவை முடியுமோ அவற்றை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டால் தனம், தானியம் பெருகி, சிறப்பான வாழ்க்கை அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT