Published : 02 Oct 2024 05:36 PM
Last Updated : 02 Oct 2024 05:36 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர்.
புரட்டாசி மாத மஹாளய அமாவாசை இந்துக்களின் முக்கிய தினமாக உள்ளது. இந்நாளில் பக்தர்கள் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று இந்தியாவின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
புரோகிதர்களின் வழிநடத்தல்படி தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். பின்னர் பூஜை செய்த பொருட்களை தலையில் சுமந்து கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். மஹாளய அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், உஷ பூஜை, உஷதீபாராதனை, உச்சி கால பூஜை, உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.
பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு. சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று காலை கன்னியாகுமரியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT