Published : 02 Oct 2024 01:19 PM
Last Updated : 02 Oct 2024 01:19 PM

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்களின் ஆரவாரத்துடன் கோலாகலம்

சென்னை: பக்தர்களின் ஆரவாரத்துடன் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம், மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கி தொடங்கி வைத்தார்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் தரப்பில் இந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக சென்னை, சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன. அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த மேடையில் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி வரவேற்று பேசியதாவது: "நல்ல முறையில் பூஜைகள் நடைபெற்றன. திருக்குடை ஊர்வலம் தென்னாட்டிலேயே பிரம்மாண்டமான நிகழ்ச்சி. ஏனென்றால் ஒரு நிகழ்ச்சி என்றால் மாடவீதியோடு முடிந்துவிடும். ஆனால் திருக்குடை ஊர்வலத்தில் மட்டும்தான் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். குடை என்பது ஆதிசேஷன். பெருமாள் எங்கு சென்றாலும் அவரோடு இருப்பார்.

நாம் திருக்குடையாக எடுத்துச் செல்லவில்லை. லட்சக் கணக்கான மக்களின் பிரார்த்தனையோடு திருக்குடையை சமர்ப்பிக்கிறோம். கடந்த ஆண்டு கனமழை பெய்தபோதும், லட்சக் கணக்கானோர் குடைக்காக காத்திருந்தனர். அந்த பக்தியோடு யாரெல்லாம் பெருமாளிடம் சரணாகதி அடைகிறார்களோ அவர்களுக்கு பெருமாள் அனுக்கிரகம் செய்து வருகிறார். அனைவரும் பக்தியை காணிக்கையாக செலுத்த வேண்டும்" என்று கோபால்ஜி பேசினார்.

திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் 50-வது பட்டம் (வர்த்தமான சுவாமி) ஆசி வழங்கினார். அவர் பேசியதாவது: "நாராயண நாமத்தை லட்சக் கணக்கானோர் உச்சரிக்கின்றனர். அந்த நாராயணனை மக்களுக்கு காண்பித்தவர் ராமானுஜர். அவர் ஆதிசேஷனின் சொரூபம் தான். பெருமாள் எங்கே சென்றாலும் அவருக்கு பணிவிடை செய்கிறார். தன்னுடைய குடைக்கு கீழ் யார் வருகிறார்களோ அவரையெல்லாம் பெருமாள் ரட்சிக்கிறார். அந்த வகையில் ஊர்வலம் போன்ற பெருமாளுக்கான பணி தொடர வாழ்த்துகள். குடை ஊர்வலத்தை பார்ப்போர் அனைவரும் நூறாண்டு காலம் வாழ வேண்டும்" என்று அவர் கூறினார்.

விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் எஸ்.கிரிஜா சேஷாத்திரி தனது வாழ்த்துரையில், "இந்து தர்மத்தில் ஒவ்வொரு கோயில் நிகழ்ச்சியும் ஊர் மக்களை திரளச் செய்யும் நிகழ்ச்சியாக பாவித்து சகோதரத்துவத்தை எடுத்துரைக்குக் நிகழ்ச்சியாக அமைகிறது. நமக்கென ஒரு தர்மம் இருக்கிறது. அதை காக்க உறுதியேற்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் எஸ்.சோமசுந்தரம் சொல்லச் சொல்ல பக்தர்கள், நாடு வலிமை பெறவும், மக்கள் நலமும் வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் எடுத்துக் கொண்டனர். காலை 11.50 மணியளவில் ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் 50-வது பட்டம் (வர்த்தமான சுவாமி) தொடங்கி வைத்தார். இதைக் கண்ட பக்தர்கள் 'நாராயணா கோவிந்தா 'என பக்திப் பரவசத்தில் கோஷம் எழுப்பினர்.

திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக்கவுனி பாலம், சூளை நெடுஞ்சாலை, ஏ.பி.ரோடு, வடமலையான் தெரு, தாணா தெரு, செல்லப்பா தெரு வழியாக இரவு அயனாவரம் காசி விசுவநாதர் கோயிலை சென்றடைகிறது. அங்கு, திருக்குடைகளை வரவேற்று, லஷ்மன் ஸ்ருதியின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து, அக்.3ம் தேதி (நாளை) முதல் சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து அக்.7ம் தேதி திருமலையைச் சென்றடையும். திருக்குடை ஊர்வலத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டு தரிசிப்பர். திருக்குடைகள் திருமலையை அடைந்ததும், ஏழுமலையான் கோயில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேங்கடமுடையானுக்கான வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x