Published : 02 Oct 2024 06:05 AM
Last Updated : 02 Oct 2024 06:05 AM

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை தொடக்கம்: அக்.12-ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா நாளை (அக்.3)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 12-ம் தேதி நள்ளிரவு முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே கர்நாடகாமாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான தசரா திருவிழா நாளை (அக்.3)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று(அக். 2) முற்பகல் 11 மணிக்கு காளி பூஜையும், இரவு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நாளை காலை 5 மணிக்கு கொடிப்பட்டம் ஊர்வலம், காலை9.30 மணிக்கு கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விரதம் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்படும். இவர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுஅம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

நாளை இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெறுகிறது. வரும் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தினமும் அபிஷேகங்கள், இரவில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12-ம்தேதி நடைபெறுகிறது. அன்று தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு உருவங்களில் வரும் மகிஷாசூரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கூடுவார்கள்.வரும் 13-ம் தேதி கொடியிறக்கம் நடைபெறும். 14-ம் தேதி மதியம் புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.

தசரா திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வீதி வீதியாக கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூல் செய்வார்கள். இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா நாளை முதல் களைகட்டத் தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x