Last Updated : 30 Sep, 2024 04:51 PM

 

Published : 30 Sep 2024 04:51 PM
Last Updated : 30 Sep 2024 04:51 PM

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்!

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று புறப்பட்டு சென்றது. அப்போது தமிழக, கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாரம்பரிய முறைப்படி மரியாதை செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பழங்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் கோலகலமாக நடத்தப்பட்டது. பின்னர் 1840ம் ஆண்டில் இருந்து திருநாள் மகாராஜா காலத்தில் நிர்வாக வசதிக்காக இந்நிகழ்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அவ்வாறு நடத்தப்பட்ட காலத்தில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், வேளிமலை முருகனும், கம்பரால் வழங்கப்பட்ட பத்பநாபபுரம் அரண்மனை சரஸ்வதி அம்மன் விக்கிரகம் ஆகிய மூன்று சாமி சிலைகள் மிக பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. அந்த விக்ரகங்கள் 10 நாட்கள் நவராத்திரி விழா முடிவடைந்த பின் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

பாரம்பரியமான இந்த நவராத்திரி விழா வருகிற 3ம் தேதி தொடங்க இருப்பதால் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் புறப்படும் நிகழ்சி நாளை(1ந் தேதி) பத்பநாபபுரம் அரண்மனையில் நடைபெறுகிறது. இங்கிருந்து தமிழக, கேரள மாநில அறநிலை துறை மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்சி இன்று காலை நடைபெற்றது. முன்னுதித்த நங்கை அம்மனுக்கு இரு மாநில போலீஸார் இணைந்து செண்டை மேளங்கள் முழங்க, வாத்தியங்கள் இசைத்து துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி ஊர்வலம் கோலாகலமாக புறப்பட்டது. அப்போது சுசீந்திரம் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் சாலையின் இருபுறமும் மலர்தூவி நங்கை அம்மனை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

இந்த ஊர்வலம் நாகர்கோவில் , பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுகிறி, வழியாக இன்று மாலை பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடைந்தது. இதே போல் வேளிமலை முருகன் விக்ரகமும் பல்லக்கில் மாலைக்குள் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாளுடன் சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சாமி விக்ரகங்களும் பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சாமி சிலைகளுக்கு ஊர்வலத்தில் பூஜை பொருட்களை கொண்டு பொதுமக்கள் வழிஅனுப்பி வைப்பார்கள். இந்த நிகழ்ச்சிகளில் இரு மாநில அறநிலை துறை அதிகாரிகள், போலீஸார் இணைந்தே ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளனர். இன்று நடைபெற்று சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாட்டில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்ஆர் காந்தி, மற்றும் ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்படும் ஊர்வலம் இரவு குழித்துறை மகாதேவர் கோயிலை சென்றடைகிறது. அங்கிருந்து நாளை மறுநாள் மீண்டும் ஊர்வலம் புறப்பட்டு களியக்காவிளை எல்லையை அடைகிறது. அங்கு கேரள போலீஸார் மற்றும் கேரள தேவசம் அதிகாரிகளிடம் குமரி சுவாமி சிலைகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை அடையும் சுவாமி விக்ரகங்கள் அங்கு தங்கவைக்கப்படுகிறது.

அடுத்தநாள் காலை புறப்படும் சுவாமி சிலை ஊர்வலம் மாலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை அடைகிறது. அங்கு தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்கத்தில் உள்ள கொலு மண்டபத்திலும், குமாரகோயில் முருகன் ஆரியசாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோயிலிலும் பூஜைக்கு வைக்கப்படுகிறது. நவராத்திரி பூஜை முடிந்து மீண்டும் சுவாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த கோயில்களில் வைக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x