Published : 28 Sep 2024 04:45 PM
Last Updated : 28 Sep 2024 04:45 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா இன்று (செப்டம்பர் 28-ம் தேதி) நடைபெற்றது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் ஆண்டு தோறும் நால்வர் இசைத் தமிழ் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நான்காம் ஆண்டு நால்வர் இசைத்தமிழ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கத்தின் தலைவர் ப.சண்முகசுந்தர தேசிகர் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் ஓதுவார்கள் தி.ஆடலரசன், ராஜபதி, கதிர்வேல் சுப்பிரமணியன், ஆ.லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். நால்வர் இசைத்தமிழ் ஆராதனை விழாவையொட்டி நால்வர் சிலைகளை ஊர்வலமாக ஓதுவாமூர்த்திகள் எடுத்து வந்தனர். கச்சபேஸ்வரர் ஆலயத்தை வலம் வந்து ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் அனைத்து ஓதுவாமூர்த்திகளும் இணைந்து ஐம்பெரும் புராணங்களை பாடி நாயன்மார்களை வழிபாடு செய்தனர். இதனையடுத்து உலக நன்மைக்காக ஆலயத்தில் உள்ள வாரியார் அரங்கத்தில் 200க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் இணைந்து பல்வேறு பதிகங்களை பாராயணம் செய்தனர். இந்த நிகழ்வில் சிவனடியார்களும் அதிக அளவில் பங்கேற்று பதிகங்களை பாராயணம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் உள்ள ஆழ்வார் பங்களா திருமண மண்டபத்தில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. நிறைவாக காஞ்சிபுரம் ஓதுவார் ர.அருண் நன்றி கூறினார். விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச பரமாச்சாரியா சுவாமிகள், திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் நிறுவனர் சு.சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT