Last Updated : 13 Jun, 2018 05:54 PM

 

Published : 13 Jun 2018 05:54 PM
Last Updated : 13 Jun 2018 05:54 PM

ஒன்றில் இரண்டு 02: அம்பாஜி அருவமா? உருவமா?

கு

ஜராத் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடருக்கும் இந்து மதத்துக்கும் வேத காலத்திலிருந்தே தொடர்பு உண்டு. புராண காலத்தில் பெரும் புண்ணிய நதியாக விளங்கி தற்போது கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் சரஸ்வதி நதி இங்கு பாய்ந்துள்ளது. இந்த மலைத்தொடரில் நெடிய குன்று ஒன்று உண்டு. அதை கப்பர் ஹில்ஸ் (Gabber Hills) என்பார்கள். அந்தக் குன்றின் உச்சியில் அம்பாஜி திருக்கோயில் உள்ளது. நூறு அடி உயரத்தில் அமைந்த கோயில்.

இது 51 சக்தி பீடங்களில் ஒன்று. தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்தில் கணவன் சிவபெருமானுக்கு உரிய அழைப்பு வழங்கப்படாததால் நியாயம் கேட்கச் சென்றாள் ச(க்)தி. அங்கே தன் மருமகனை இழித்துப் பேசினான் தட்சன். மனம் பொறுக்காத சக்தி தீயில் விழுந்தாள். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவபெருமான் சக்தியின் உடலைச் சுமந்துகொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆட, சக்தியின் உடல் பகுதிகள் பாரத நாட்டின் பல பகுதிகளில் சிதறியது. அப்படி அவை விழுந்த 51 இடங்களை சக்தி பீடங்கள் என்கிறார்கள்.

தேவியின் இரு தனங்கள் அற்ற மார்புப் பகுதி ஆரவல்லிக் குன்றில் விழுந்தது என நம்பப்படுகிறது. இந்தக் குன்றிலுள்ள ஆலயத்தில் உறைந்திருக்கிறார் அம்பாஜி என்று அழைக்கப்படும் அம்மன்.

அணையா விளக்காக அம்மன்

கருவறையில் அம்மன் அரூபமாகக் காட்சியளிக்கிறார். அதாவது அங்குள்ள அணையாவிளக்குதான் அம்மன். மாலையில் சீக்கிரமே இந்த ஆலயம் மூடப்பட்டு விடுகிறது. காரணம் ஆரவல்லிக் குன்றில் ஏறி இறங்கும்போது எதிர்கொள்ளக்கூடிய சில சிக்கல்கள்.

இப்போது மலையைவிட்டு சமதளத்துக்கு வருவோம். குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது அம்பாஜி என்ற நகரம். இது பனஸ்காந்தா என்ற மாவட்டத்தில் இருக்கிறது. இங்குதான் அமைந்திருக்கிறது அம்பாஜி ஆலயம். மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கு குழுமுவது வெகு சகஜம். இது அகமதாபாதிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது.

அப்படியானால் அம்பாஜி ஆலயம் என்பது குன்றில் இருப்பதா, சமதளத்தில் இருப்பதா? ஒருவேளை ஒரே தெய்வ உருவத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்கள் இருப்பது சகஜம்தானே, இவையும் அந்த மாதிரியா? இல்லை. இரண்டையும் இணைப்பது வேறு பின்னல். அந்தச் சுவையான பின்னணியை இப்போது பார்க்கலாம்.

முதலில் இருந்தது குன்றின்மேல் உள்ள ஆலயம்தான். வேத காலத்திலிருந்தே இந்த ஆலயம் இருந்ததாக நம்பிக்கை உண்டு. புராதன காலத்தில் ஆலயத்துக்குச் செல்ல படிகள் கிடையாது. பலவித கோணங்களில் துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளில் கால் வைத்துதான் செல்ல வேண்டும்.

அம்மனின் புகழ் பரவியது. அம்பாஜியின் அருள் இருந்தால் பிணிகள் தீரும், செல்வம் அதிகரிக்கும், நிம்மதி பெருகும் எனும் நம்பிக்கை பரவியது. பலரும் அந்த ஆலயத்தில் மிகுந்த சிரமப்பட்டு ஏறினார்கள். ஆனால், அவர்களில் சிலர் கால் தவறிக் கீழே விழுந்து இறந்தார்கள்.

அந்த சமஸ்தானத்தின் மன்னர் இதைக்கண்டு மிகவும் வருந்தினார். மாற்று ஏற்பாடு தேவை என்று கருதினார். நகரின் மையத்தில் அமைந்த உயர்ந்த மேடையைப் பார்த்ததும் அவருக்கு ஓர் எண்ணம் வந்தது. குன்றின்மேல் இருக்கும் அம்பாஜியை நகரத்தின் மையத்தில் இருக்கும் இந்த மேடையில் எழுந்தருளச் செய்யலாமே!

கண்ணுக்குத் தெரியாத எந்திரம்

உருவச் சிலையே இல்லாத இந்தக் கருவறைதான் நகரின் மையத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் லட்சக்கணக்கானவர்களால் வழிபடப்படுகிறது.

இந்த ஆலயத்தை ஓர் கலைக்கோவில் என்றே கூறலாம். அப்படியொரு சிற்ப அழகு. பார்க்கும்போதே மனதை ஈர்க்கிறது. கருவறையின்மீது சுமார் 70 அடி கொண்ட பளிங்கு கோபுரம் காணப்படுகிறது. அற்புதமான விமானம். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார்கள்.

விவரம் அறியாமல் - அதாவது மேலே குறிப்பிட்ட விவரங்களை மட்டுமே அறிந்து கொண்டு - கருவறைக்குச் சென்றால் திகைப்பு ஏற்படக் கூடும். காரணம் அங்கு தேவியின் உருவத்தை உங்களால் தரிசிக்க முடியும்.

‘இது எப்படிச் சாத்தியம்? சூலம் இல்லாத வெற்றுக் கருவறையை அல்லவா மக்கள் அம்பாஜியாக நினைத்து வழிபட்டார்கள்?’ என்கிறீர்களா?

காரணம் இதுதான். அலைபாயும் மனம் கொண்ட நம்மில் பலரும் ‘கருவறை என்றால் அங்கு தெய்வத்திருவுருவமும் இருக்கும். அதுவே நாம் முனைப்புடன் வழிபட வேண்டிய முக்கியத் தெய்வம்’ என்று நினைத்துப் பழகிவிட்டோம். எனவே பக்தர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவவும் அங்கு தேவியின் உருவம் தினம் தினம் ‘உருவாக்கப்படுகிறது’!

அதாவது கருவறையில் எந்திரம் ஒன்று பதிக்கப்பட்டிருக்கிறது. இது சாதாரணமாகக் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை. இந்த எந்திரத்தை பக்தர்கள் நேரடியாகப் பார்க்கக் கூடாது. கண்களை வெள்ளைத் துணியால் கட்டிக்கொண்டுதான் பார்க்க முடியும். இந்த எந்திரத்தில் கூர்மம் (ஆமை) உள்ளது. தவிர 51 தெய்வீக எழுத்துகளும் இதில் பொறிக்கப்பட்டுள்ளதாம். இந்த எந்திரத்தைச் சுற்றி பூக்களால் தினமும் ஒரு தேவியின் உருவத்தைக் கருவறையில் உருவாக்குகிறார்கள் அர்ச்சகர்கள்.

ஆம். ஆராசூரி அம்பாஜி ஆலயத்தின் கருவறையில் தேவியின் உருவத்தைப் பார்க்கலாம். பல்வேறு மலர்கள் பல்வேறு தேவியின் உருவங்கள். கற்சிலையோ, உலோக விக்ரஹமோ இருந்தால் அடிப்படை உருவம் ஒன்றாகத்தான் இருக்கும். நவராத்திரி போன்ற விசேஷ நாட்களில்தான் பெரும் அலங்காரம் இருக்கும். ஆனால் அம்பாஜி ஆலயம் அலாதியானது. விதவிதமான மலர்களில் தேவியின் விதவிதமான வடிவங்கள். தினமும் வந்து இந்த வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு களிப்பதற்காகவே மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது. எங்கெங்கும் ‘அம்பே’ என்ற புனித நாமம்.

கருவறையின் கதவுகள் வெள்ளியால் செய்யப்பட்டுள்ளன. கருவறைக்கு வெளியே பெரும் திறந்தவெளி. இதில் வராகி, கணபதி போன்றோருக்கு ஆலயங்கள் உள்ளன.

ஆலயத்துக்கு வெளியே மிகுந்த பரபரப்புடன் சிறு வணிகர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சின்ன சர்க்கரை உருண்டைகளும் பூந்தியும் பக்தர்களால் இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படுவதைப் பாரக்கலாம். நகரங்களில் கொஞ்சம் அரிதாகிவிட்ட இலந்தை மற்றும் விளாம் பழங்கள் அங்கு சகஜமாக விற்கப்படுகின்றன.

உருவமாகவும் அருவமாகவும்

பிரபல ராஜபுதன வீரரான மேவாரின் மன்னன் ராணா பிரதாப் சிங் ஆரசூரி அம்பாவின் பரம பக்தன். தனது பிரபல வாளை அம்மனுக்கு சமர்ப்பித்தான் அவன்.

விமானத்தின் மேற்புறத்தில் கலசம் ஒன்று காணப்படுகிறது. அதாவது 103 அடி உயரத்தில் அமைந்த கலசம். இதன் எடை 3 டன். ஆரசூர மலைச் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட வெண்மையான சலவைக்கல்லால் உருவாக்கப்பட்ட கலசம் இது. இந்தக் கலசத்தின் மேல் தங்கத் தட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. மாதா அம்பாஜியின் காவிக் கொடி இந்தக் கலசத்தின்மீது பட்டொளி வீசிப் பறக்கிறது.

“டோல் மாரி அம்பே, ஜெய் ஜெய் அம்பே’’ என்ற கோஷங்கள் அம்பாஜி நகரை அதிர வைக்கின்றன.

‘மரத்தில் மறைந்தது மாமத யானை. மரத்தை மறைத்தது மாமத யானை’ என்ற நம் திருமூலரின் வாக்குக்கு உதாரணமாகக் காட்சி அளிக்கிறாள் உருவமாகவும் அருவமாகவும் உள்ள அம்பாஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x