Published : 20 Jun 2018 07:20 PM
Last Updated : 20 Jun 2018 07:20 PM
ஜூன் 21 சர்வதேச யோகா தினம்
உலகத்துக்கு இந்தியாவின் கொடையாகக் கருதப்படுகிறது ‘யோகாசனம்’. இந்தியாவில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தோன்றி, பல்வேறு ஞானிகளால் வழிவழியாகப் போதிக்கப்பட்டுவந்த கலை யோகாசனம். இவற்றைத் தொகுத்துத் தந்தவர் பதஞ்சலி முனிவர் என்று கூறப்படுகிறது. யோகக் கலைக்கு இவ்வாறு ஒரு வடிவம் பிறந்தது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
‘யுஜ்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து பிறந்ததுதான் யோகா என்ற சொல். யுஜ் என்றால், இணைதல், ஒருங்கிணைதல் என்று பொருள். அதாவது, உடற்பயிற்சியோடு சுவாசம் இணைதல், பயிற்சியோடு மனம் இணைதல், சுவாசத்தோடு மனம் இணைதல், உடல், சுவாசம், மனம் இவை மூன்றும் ஒருங்கிணைதல், பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்திருக்கும் அண்டப் பெருசக்தியோடு, நம் உள் ஆற்றலை இணைத்தல். இப்படிப் பல அர்த்தங்களைக் கூறலாம்.
மருத்துவ அறிவியலின் வளர்ச்சி காரணமாக, பெரும்பாலும் எல்லா வகையான தொற்றுநோய்களுக்கும் தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இன்றைய உலகில் மனித குலத்துக்குச் சவாலாக இருப்பது அதிக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவையே. இவை அனைத்தும் தொற்றாத நோய்களே. அதாவது, கிருமிகள் இந்நோய்களைப் பரப்புவதில்லை. ஒவ்வொரு மனிதரும் தனது தவறான பழக்கவழக்கங்கள் காரணமாகத் தனக்குள்ளேயே இந்த நோய்களை வரவழைத்துக்கொள்கிறார்.
உடற்பயிற்சி இல்லாதது, தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும் உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவை நோய்களுக்கான முக்கியக் காரணங்கள். நம் உடலில் நாமே தோற்றுவித்துக்கொள்ளும் பாதிப்புகளுக்குத் தீர்வும் நம்மிடம் இருந்துதானே கிடைக்க வேண்டும். மருத்துவ அறிவியல் தரும் மருந்துகள் இதற்குத் தீர்வு தராது. உடலோடு சேர்த்து மனத்தையும் பண்படுத்தும் யோகாதான் இதற்கு அருமருந்து. இதை உலக சமுதாயம் புரிந்துகொண்டதன் விளைவுதான், ஒட்டுமொத்த உலகமும் தற்போது யோகப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது.
யோகக் கலையோடு, நம் உடற்கூறியல் பற்றியும் நன்கு அறிந்த ஆசானின் உதவியோடு, அவரது நேரடி மேற்பார்வையில் யோகாவைக் கற்று, பின்னர் இடைவிடாமல் பயிற்சி பெற வேண்டும். உடலும் மனமும் சுவாசமும் ஒருங்கிணைந்து, பயிற்சிகள் செய்யும்போது, அது நம் உடலுக்கு அளப்பரிய ஆற்றலை வழங்குகிறது.
கை, கால்களை அசைத்தும் திருப்பியும் முறுக்கியும் உடலை வில்லாக வளைத்தும் செய்கிற பயிற்சிதான் யோகா - இதுதான் பொதுவாக யோகாவைப் பற்றிப் பலருக்கும் எழும் கருத்து. ஒரு வகையில், இது உண்மைதான். இவ்வாறு உடலைப் பல்வேறு விதமாகத் திருப்பிச் செய்யும் பயிற்சிகளால் ரத்த ஓட்டம், சுவாசம் போன்றவை சீராகி, உடலின் பாதிப்புகள் எல்லாம் படிப்படியாக நீங்கி, ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்வது உண்மைதான்.
தவிர, நம் வாழ்க்கை முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர முடியும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நடத்தையிலும் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதை அறிய முடியும். நம்மிடம் தேவையின்றி ஏற்படும் பதற்றங்கள் குறையத் தொடங்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.
அகத்தில் யோகா
யோகாவின் ஒரு பகுதியாக விளங்குவது பிராணாயாமம். அதாவது, நாம் உயிர் வாழ்வதற்கு மிக மிகத் தேவையானது மூச்சு - சுவாசம். நம் உடல் கடைசிவரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சுவாசம் சீராக, ஒரு கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். முறையான வழிகாட்டுதலில், சுவாசப் பயிற்சிகளைக் கற்றறிந்து, தொடர்ந்து பயின்றால், ரத்தம் மற்றும் மூளைக்கு அதிக பிராணவாயு கிடைக்கும்.
உடலுக்கான யோகாவுடன், சுவாசத்தை வலுப்படுத்தும் பிராணாயாமமும் சேருகிற பட்சத்தில், உடல் தன்னைத்தானே நன்கு சுத்திகரித்துக்கொள்கிறது. தேவையற்ற அசுத்தங்கள் நீங்குகின்றன. ஆரோக்கியம் அதிகமாகிறது. தொடர்ந்து சுவாசப் பயிற்சி செய்கிறவரின் முகமும் உள்ளமும் மிகவும் தெளிவுடன் இருக்கும். சிந்தனை சீராக இருப்பதால், நாம் மேற்கொள்கிற செயல்களில் முழுக் கவனம் செலுத்த இயலும். தெளிவாக, உறுதியாக முடிவெடுக்கவும் இயலும்.
எட்டு அங்கங்கள் கொண்ட யோகம்
அதே நேரம், இந்தப் பயிற்சிகள் மட்டுமே அல்ல யோகா. தனக்குள் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியலாகவும் யோகா விளங்குகிறது.
பதஞ்சலி முனிவர் வழங்கிய யோகசூத்திரம் சுமார் 200 சூத்திரங்களைக் கொண்டிருக்கிறது. இது வேத உபநிடதங்களில் உள்ள யோகப் பயிற்சிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். பதஞ்சலி கூறும் ராஜயோகமானது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற 8 அங்கங்களைக் கொண்டதாகும். அதுவே அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது. திருமூலரின் திருமந்திரம் இதை அட்டாங்க யோகம் என்கிறது.
பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது, கொல்லக் கூடாது. உண்மையே பேச வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. திருடக்கூடாது. இவற்றை உறுதியோடு கடைப்பிடிப்பது யமம்.
மனத்தூய்மையுடன் இருக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு நிம்மதியான, மகிழ்ச்சியான, எளிமையான வாழ்வு வாழ்தல், இறைவழிபாடு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது நியமம். உடலுக்கான பயிற்சியை மேற்கொள்வது ஆசனம். மூச்சைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமம். ஐம்புலன்களுக்கு அடிமையாகாமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்துவது பிரத்யாஹாரம். உள்ளத்தைப் படிப்படியாக நிலைநிறுத்தி ஒருமுகப்படுத்துவது தாரணை. நமக்குள் இருக்கும் இறைவனைக் கண்டறிந்து, அவன்பால் கவனம் செலுத்துவது தியானம்.
நிறைவாக சமாதி. முழு அமைதி, சுய கட்டுப்பாட்டுடன் இருத்தல், தேவையற்ற பற்றுகள், உணர்ச்சிவசப்படுவது போன்றவற்றைக் கைவிடுதல், கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளும் பக்குவத்தைப் பெறுதல், வாழ்க்கையில் முழு நிம்மதி பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய உன்னதமான பெறுவாழ்வே சமாதி எனப்படுகிறது.
யோகாசனங்கள், பிராணாயாமம் மட்டுமின்றி, இந்த யோகங்களையும் நாம் படிப்படியாகக் கடைப்பிடிக்கத் தொடங்கும்போது, முழுமைபெற்ற, மகிழ்ச்சியான வாழ்வு நமக்குக் கிடைக்கிறது. ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்வு ஆரோக்கியமாவதோடு, சமுதாயத்தையும் இது மேம்படுத்தும்.
# உலகக் காரியங்களில் இருக்கும்போது, இரண்டு சுவாசங்களுக்கிடையே கவனத்தை வைத்திருப்பது. அதைத் தொடர்ந்து பயில்வது ஆகியவற்றின் மூலம் சில நாட்களிலேயே புதிதாகப் பிறக்கலாம். # உங்கள் அத்தனை கவனத்தையும் தாமரைத் தண்டைப் போல நுண்ணியதாக இருக்கும் நரம்பில், தண்டுவடத்தின் மத்தியில் வையுங்கள். அப்படியாக, நீங்கள் மாற்றமடைந்தவராவீர்கள். # பாதங்கள் அல்லது கைகளின் துணையின்றி பிருஷ்டத்தின் மீது அமருங்கள். உடனடியாக நடுமம் கிடைக்கும். # ஆசிர்வதிக்கப்பட்டவளே, புலன்கள் இதயத்துக்குள் பொதிந்திருக்கும்போது, தாமரையின் நடுமத்தை அடைகிறது. (விஞ்ஞான் பைரவ் தந்திரா யோக நூலிலிருந்து) |
தொடர்புக்கு: ravikumar.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT