Published : 16 Sep 2024 01:58 PM
Last Updated : 16 Sep 2024 01:58 PM
உதகை: 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், உதகை ஃபர்ன்ஹில்லில் அமைந்துள்ள ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில். இக்கோயில், பவானி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றின் முகப்பில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இதனால் இங்கு கோயில் கொண்டுள்ள சிவனுக்கு ஸ்ரீ பவானீஸ்வரர் என்று பெயர். இந்தக் கோயில் 150 ஆண்டுகள் பழமையானது.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி (பவானி அம்மன்) தேவியுடன் கூடிய சிவலிங்கத்துடன் நீலகிரியில் அமைந்துள்ள ஒரே முழு அளவிலான சிவன் கோயில் இதுவாகும். இத்திருகோவில் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது. மூலவர் பவானீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் சாமுண்டீஸ்வரி/பவானி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு 1910-ம் ஆண்டு புகழ்பெற்ற வருடாந்திர ஆருத்ரா தரிசன விழா முதன் முதலில் தொடங்கியது. 1950-களின் முற்பகுதியில், ஸ்ரீ ஸ்ரீ ஜெய சாமராஜேந்திர உடையார் இக்கோயிலைப் புதுப்பிக்க உதவினார். ஏப்ரல் 1975-ல் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இத்தனை சிறப்புகள் கொண்ட 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று (செப்.16) கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்களால் திருக்குடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீரானது ராஜகோபுரம், உள்ளிட்ட கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகர், அம்பாள், சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT