Published : 09 Sep 2024 05:30 AM
Last Updated : 09 Sep 2024 05:30 AM
சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்திவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீதிகளில் விதவிதமாக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம்கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முந்தைய நாளிலேயே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான இடங்களில் களிமண் விநாயகர் சிலை கடைகள் திறக்கப்பட்டு, விறுவிறுப்பாக விற்பனை நடந்தது. குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.2,000 வரை சிலைகள் விற்பனையாகின.
சதுர்த்தி நாளன்று பொதுமக்கள்தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பல்வேறு வகையான பழங்கள் படைத்து வழிபாடு நடத்தினர். கோயில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விநாயகப் பெருமானுக்கு சிறப்புபூஜைகள், அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. மாலையில் விநாயகர் வீதிஉலா நடைபெற்றது.
வழக்கம்போல, பொது இடங்களிலும் பந்தல்கள் அமைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 1,519 பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
அந்த வகையில், கொளத்தூர் பூம்புகார் நகரில் 42 அடி உயரத்தில் சுமார் 3 ஆயிரம் பித்தளை விளக்குகள், சங்குகளுடன் கூடிய பிரம்மாண்ட விநாயகர், பெரவள்ளூரில் 500 மஞ்சள் கிழங்குகளை பயன்படுத்தி 30 அடியில் உருவாக்கப்பட்டுள்ள சயன விநாயகர், திருவிக நகரில் 5,001 பிஸ்கட் பாக்கெட்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ஜிகேஎம் காலனியில் பிரம்மாண்ட லட்டு விநாயகர், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை அருகே கதாயுதத்துடன் கூடிய விநாயகர் சிலை மற்றும் அருகம்புல் விநாயகர், மயில்தோகை விநாயகர், ஐந்து முக விநாயகர், தேங்காய் விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை வரும் 11, 14, 15-ம் தேதிகளில் கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் சிலைகளை கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT